எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு: தேசிய கொடியை அவமதித்ததாக புகார்

பட மூலாதாரம், S.VE SHEKAR / FACEBOOK
தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் தேசிய கொடிக்கு தவறான அர்த்தம் கற்பித்துப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பெரியார் சிலையின் மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. பிறகு, எம்.ஜி.ஆர் சிலையின் மீது காவித் துண்டு போர்த்தப்பட்டது. இதற்கு அ.தி.மு.கவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடுமையான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.வி. சேகர் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "காவி என்றால் களங்கமா, அப்படியானால், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காவி நிறம் இல்லாத தேசிய கொடியை முதல்வர் ஏற்றப்போகிறாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களுக்கும் மூன்று மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் எஸ்.வி. சேகர் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் மாநகர காவல்துறையின் இணையதள பக்கத்தில் புகார் அளித்திருந்தார்.
முன்னதாக, இந்த புகார் குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டிருப்பதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று எஸ்.வி. சேகர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








