தில் பெச்சரா: சுஷாந்த் நடித்த கடைசி திரைப்படம் இணையத்தில் வெளியானது - ரசிகர்கள் உருக்கம்

தில் பெச்சரா

பட மூலாதாரம், Twitter

கடந்த மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த திரைப்படமான 'தில் பெச்சரா' இன்று காணொளி இணையதளம் ஒன்றில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

'தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்னும் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படமே கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை அருகே உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் நடித்த கடைசி திரைப்படம்.

முகேஷ் சப்ரா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக சஞ்சனா சாங்கி நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் திரையரங்கங்கள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் இந்த திரைப்படம் ஒடிடி தளம் வழியாக சில மணிநேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

சாதனை படைத்த ட்ரைலர்

கடந்த 6ஆம் தேதி யூடியூபில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் ட்ரைலர் முதல் 24 மணிநேரத்தில் 4.8 மில்லியன் லைக்குகளை பெற்று உலக சாதனை படைத்தது.

மேலும் அதில் சுஷாந்தின் நடிப்பு குறித்தும் பல உருக்கமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.

ட்ரைலரை பார்த்த சுஷாந்த் ரசிகர்கள் பலரும் அவரது நினைவால் வருந்தியதாகவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.

அதேபோன்று, இன்று இரவு 7:30 மணிக்கு வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் சுஷாந்தின் நடிப்பு குறித்தும், அவரது இழப்பு குறித்தும் உருக்கமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

’தில் பெச்சரா’ திரைப்படம் குறித்த இணைய தேடல்கள் தற்போது இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளன.

யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்?

1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார் சுஷாந்த். பிறகு, பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்கத் தொடங்கினார்.

திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.

அதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.

'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.

'தோனி அண்டோல்ட் ஸ்டோரி' என்னும் படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: