"தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தமளிக்கிறது" - தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் சந்திப்பில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜூலை 23ஆம் தேதியன்று மாலையில் சிலர் காவித் துண்டை அணிவித்தனர். இதையடுத்து அந்த இடத்திற்குச் சென்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தச் செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, "எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.
மேலும், "சமீபகாலத்தில் இதுபோன்ற சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தைத் தருகின்றன. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்கப்பாடுபடுவது மட்டுமல்ல, மாற்றுக் கருத்துகளையும் மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதாகும்" என்றும் கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களைக் காயப்படுத்துவது மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும் என்றும் மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும் அதன் மூலம் ஓட்டரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது என்றும் முதலமைச்சர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் பின்னால் இருக்கும் சமூக விரோதிகளை இனம்கண்டு, சமூகத்தின் முன்பும் சட்டத்தின் முன்பும் தோலுரித்துக் காட்டிட வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சரை எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












