Money Heist சீசன் 4 விமர்சனம்

பட மூலாதாரம், Netflix
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Money Heist (La Casa De Papel) தொடரின் முதல் மூன்று சீஸனும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதால், இந்த 4வது சீஸன் மீதான எதிர்பார்ப்பும் ஏகத்திற்கும் இருந்தது.
இதுவரை இந்தத் தொடரில் மூன்று சீஸன்கள் வெளிவந்திருக்கும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கிறது இந்த நான்காவது சீஸன். இந்தத் தொடரை இதுவரை பார்க்காதவர்களுக்காக ஒரு சிறிய முன்கதைச் சுருக்கம்: (Spoiler alert) ஸ்பெயின் நாட்டின் கரென்சி நோட்டுகளை அச்சிடும் ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயினைக் கொள்ளையடிக்க, புரொஃபஸர் என்பவர் வழிகாட்டுதலில் ஒரு குழு உள்ளே நுழைகிறது. அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கெல்லாம் டோக்கியோ, மாஸ்கோ, பெர்லின், நைரோபி, ரியோ, டென்வர், ஹெல்சிங்கி, ஆஸ்லோ என உலகின் பெரிய நகரங்களின் பெயர்களே சூட்டப்பட்டிருக்கும். இந்தக் குழு மின்ட்டிற்குள் இருப்பவர்களை பணயக் கைதிகளாக்குகிறது. மின்ட்டின் ஆளுநரும் அதில் ஒருவர். கொள்ளைக் கும்பலிலிருந்து மின்ட்டை மீட்க ஒரு மீட்புக் குழுவை அமைக்கிறது அரசு. உள்ளே நுழைய அதிரடிப்படையும் தயார் நிலையில் இருக்கிறது.
மூன்றாவது சீஸனின் இறுதியில், நிலைமை புரொஃபஸரின் கையை மீறிப் போக ஆரம்பிக்கிறது. கொள்ளைக் கும்பலின் துணிச்சல் மிக்க பெண்ணான நைரோபிக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டு, உயிருக்குப் போராடுகிறாள். இந்தக் கொள்ளை முயற்சி வெற்றிபெறுமா என்ற நிலையில் அந்த சீஸன் முடிவடைந்தது.

பட மூலாதாரம், Netflix
இந்த நான்காவது சீஸனில் (spoiler alert) நைரோபிக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. காவல்துறை வசமுள்ள ரகில் முரில்லோ மீட்கப்படுவாரா என்ற பதற்றம் ஒருபுறமிருக்க, மீண்டும் குழுவை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் புரொஃபஸர். இதற்கிடையில் பணையக் கைதியாக இருக்கும் மின்ட்டின் பாதுகாப்புக் குழுத் தலைவன் காடியா தப்பிவிடுகிறான். மின்ட்டை மீட்கும் முயற்சியில் உள்ள நடவடிக்கைக் குழுவில் உள்ள அலீசியா சியெர்ரா தன்னிச்சையாக சில நடவடிக்கைகளில் இறங்க, அது அரசுக்கே பெரிய நெருக்கடியாக மாறுகிறது.
இந்தத் தொடரின் இயக்குனர்களைப் பொறுத்தவரை, நம்பகத்தன்மையெல்லாம் ஒரு முக்கியமான விஷயமல்ல. தொடரைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துவிட வேண்டும்; தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பது மட்டுமே லட்சியம். அந்தப் போக்கே இந்த சீஸனிலும் தொடர்கிறது. தவிர, தொடர் நெடுக இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெறும் கொள்ளையர்களாக அல்லாமல், அரசை எதிர்த்து நிற்கும் போராளிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள்.

பட மூலாதாரம், Netflix
இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவை அவ்வப்போது ஃப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது. ஆகவே Money heist என்பது வெறும் கொள்ளையல்ல. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேவையைத் தீர்க்கும் ஒரு முயற்சி.
ஆனால், இந்த கொள்ளையில் ஈடுபடும் புரொஃபஸரின் நோக்கம்தான் என்ன? தங்கத்தையும் பணத்தையும் கொள்ளையடிப்பது தானா? இந்த சீஸனில் 'பாரிஸ் திட்டத்தை' செயல்படுத்துகிறார் புரொஃபஸர். இது கிட்டத்தட்ட அரசையே ஆட்டம்காண வைக்கிறது. ஆனாலும் புரஃபஸர் மற்றும் இந்தக் கும்பலின் உண்மையான ஒருங்கிணைந்த நோக்கம் என்ன என்ற சந்தேகம் இந்த சீஸனிலும் தீரவில்லை.
ஒவ்வொரு சீஸனும் மிகச் சிக்கலான ஒரு கட்டத்தில், கொள்ளைக் கும்பலுக்கு அடுத்து என்ன ஆகுமோ என்ற நிலையில் முடியும். இந்த சீஸனும் அப்படித்தான் முடிகிறது. ஐந்தாவது சீஸனுக்காகக் காத்திருக்க வைக்கிறது.
முதல் மூன்று சீஸனைப் பார்த்தவர்களுக்கு இந்த சீஸன் சற்று ஏமாற்றமாக இருக்கும். குறிப்பாக முதல் ஐந்து எபிசோடுகள் மிகச் சாதாரணமாகவே நகர்கின்றன. ஆனால், மீதமுள்ள மூன்று எபிசோட்களில் மீண்டும் பழைய பரபரப்பிற்கு வந்துவிடுகிறார்கள். ஏகப்பட்ட ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளும் உண்டு.
முதல் மூன்று சீஸனைப் பார்க்காதவர்கள் கூட, கதையைக் கேட்டுவிட்டு நான்காவது சீஸனை பார்த்து ரசிக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












