கொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண்ட கலைஞர்கள் Corona Relief Work

    • எழுதியவர், வித்யா காயத்ரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.

வேண்டுகோள்

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவாவது அவர்களை சமாளிக்க சொல்லலாம். காலவரையறை இல்லாமல் எனக் கூறும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. எத்தனை நாட்கள் கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அவர்களால் எப்படி திரும்ப கொடுக்க இயலும். பெரிய நடிகர்கள் யாராவது முன்வந்து அவர்களுக்கு பணரீதியாக உதவிகள் செய்யாவிட்டாலும், அரிசி மூட்டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்காவாவது உதவி செய்யலாம்.' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, உறுப்பினர்களுக்கு உதவக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பெப்ஸி தொழிலாளர்களுக்கு பல்வேறு நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

நடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்தினர் சார்பாக பத்து லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக வழங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் பத்து லட்சம் ரூபாயை அளித்திருக்கிறார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் 25kgs எடையுள்ள அரிசி மூட்டைகள் 150 வழங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் லலித்குமார் பத்துலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். நடிகர் ஹரீஷ் கல்யாண் ஒருலட்ச ரூபாயை ஃபெப்ஸி ஊழியர்களுக்காக வழங்கியிருக்கிறார்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி

நடிகர் சங்கத்தின் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் நடிகர் சங்க சிறப்பு அலுவலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ' நடிகர் சங்கத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்புப் பணிகளையே நம்பி இருப்பவர்கள். இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஃபெப்ஸி சார்பில் பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு, உதவிகளும் வந்து கொண்டிருக்கின்றன. அது போல நமது சங்கம் சார்பிலும் சங்க வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு உதவி கோரினால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்று இன்று சிறப்பு அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ' நமது சங்க உறுப்பினர்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும், அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும் எனக் குறிப்பிட்டு சங்கத்தின் வங்கிக் கணக்கு எண்ணையும் அந்த அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் பத்து லட்சம் ரூபாயை நிதியாக அளித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: