திரௌபதி: சினிமா விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன். ஜியும் அந்தப் படத்தில் நடித்த ரிச்சர்டும் மீண்டும் இணைந்திருக்கும் படம் திரௌபதி.

தன் மனைவி திரௌபதியையும் (ஷீலா ராஜ்குமார்) அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக் கொலை செய்ததாககக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பிரபாகரன் (ரிச்சர்ட்) பிணையில் வெளியில் வருகிறார்.

பிறகு, சென்னைக்குச் சென்று தேநீர் விற்பவரைப் போல வேடமிட்டு இரண்டு கொலைகளைச் செய்கிறார். பிரபாகரன் உண்மையிலேயே ஆணவக் கொலைகளைச் செய்தாரா, பிரபாகரனால் கொல்லப்படுபவர்கள் யார், அவர் எதற்காக இந்தக் கொலைகளைச் செய்கிறார் என்பதுதான் 'திரௌபதி'.

2013ஆம் ஆண்டுவாக்கில் சென்னையில் ராயபுரம், சென்னை வடக்கு ஆகிய இரண்டு பதிவாளர் அலுவலகங்களில் 3,500க்கும் மேற்பட்ட திருமணங்கள் மோசடியாக பதிவுசெய்யப்பட்டன. இந்த சம்பவங்களில் பதிவாளர்களை வழக்கறிஞர்கள் வலியுறுத்தி பெண்ணும் மாப்பிளையும் இல்லாமலேயே திருமணங்களைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இப்படி திருமணம் பதிவான பிறகு, அந்தத் திருமணத்தில் மாப்பிளையாக பதிவுசெய்யப்பட்டவர் நீதிமன்றங்களை அணுகி, தன் மனைவியை யாரோ சட்டவிரோதமாக அடைத்துவைத்திருப்பதாகவும் மீட்டுத்தர வேண்டுமென்றும் வழக்குத் தொடர்வார். ஆனால், பெரும்பாலான சந்தர்பங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

'பைக்கையும் செல்போனையும் வைத்துக்கொண்டு, சில இளைஞர்கள் வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள்' என்று அரசியல்தளத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டையும் மேலே சொன்ன முறைகேட்டையும் ஒன்றாக இணைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

தான் தேர்வுசெய்திருக்கும் கதையின் பின்னணியே போதுமான அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைத்ததாலோ என்னவோ, கதை - திரைக்கதை, நடிப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் இயக்குநர் பெரிதாக அலட்டிக்கொள்ளவேயில்லை.

கதாநாயகன் இரண்டு கொலைகளைச் செய்கிறார். இதனை காவல்துறை கண்டுபிடித்து கதாநாயகனை கைதுசெய்கிறது. அவரிடம் காவல்துறை விசாரிக்கும்போது, தன் குடும்பமே ஓர் இளைஞனால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லி அவனை அழைத்து வரச்சொல்கிறார்.

காவல்துறையும் அவனை அழைத்துவருகிறது. அதற்குப் பிறகு, இளைஞனும் கதாநாயகனும் மாற்றி மாற்றி ஃப்ளாஷ்-பேக்கில் கதை சொல்கிறார்கள். பிறகு, கதாநாயகன் செய்த இரண்டு கொலையையும் மறந்துவிடுகிறார்கள். பிறகு ஏதோ ஒரு பொதுநல வழக்கு நடக்கிறது. ஓர் ஆவணப் படம் எடுக்கிறார்கள். கதாநாயகி வேறு உயிரோடு வந்துவிடுகிறார். ஷப்பா....

சாதாரண பழிவாங்கும் கதையாக எடுத்திருந்தாலே சுவாரஸ்யமாக வந்திருக்கக்கூடிய கதையை, 'கருத்து சொல்கிறேன் பேர்வழி' என்று படம் பார்ப்பவர்களை சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

அதுவும் இடைவேளைக்குப் பிறகு, கதாநாயகி மூலமாக சொல்லப்படும் வண்டிவண்டியான கருத்துகளில், பல அபாயகரமானவை. "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பதில்லை', "என்றைக்கு சானிடரி நாப்கின் வந்ததோ, அன்றைக்கே கார்ப்பரேட்காரன் நாம் பிள்ளைபெறுவதை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டான்" என்பதுபோல பட்டியல் போட்டு பேசிக்கொண்டே போகிறார்.

கதாநாயகி ஒரு காட்சியில் கொலையான பிறகு, இனிமேல் கருத்து இருக்காது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், வழக்கறிஞராக வரும் கருணாஸ் பக்கம் பக்கமாகப் பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு கேரக்டர் 'க்ளோஸ் - அப்'பில் வந்தாலே நம் காதெல்லாம் கதறுகிறது. கருத்துச் சுதந்திரம் என்பதை இயக்குநர் வேறுவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

கதாநாயகனாக வரும் ரிச்சர்ட் சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் ஷீலாவும் பரவாயில்லை. ஆனால், படத்தின் மற்ற பாத்திரங்களில் வருபவர்கள், ரொம்பவுமே சோதிக்கிறார்கள். படத்தில் இசையும் பாடல்களும் ஓகே ரகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: