Into The Wild ரஜினிகாந்த் - பந்திபூர் காட்டில் பியர் கிரில்ஸ் உடன் என்ன செய்யப் போகிறார் ரஜினி? வெளியான புதிய வீடியோ

பட மூலாதாரம், Discovery
டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் உடன் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் Into The Wild என்ற நிகழ்ச்சி மார்ச் மாதம் 23ஆம் தேதி டிஸ்கவரியில் ஒளிபரப்பாக உள்ளது.
டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் கடந்தாண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியை தொடர்ந்து அதே பாணியிலான நிகழ்ச்சிகளை Into The Wild என்ற தலைப்பில் டிஸ்கவரி இந்தியா நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டிருந்தது.
அதன் முதல் பகுதியில் திரைப்பட ரஜினிகாந்த நடிக்கிறார். இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 23ஆம் இரவு 8 மணியளவில் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் இந்த நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அப்போது, ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் முன்பு தெரிவித்திருந்தது.
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
டிஸ்கவரி இந்தியா நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் கலந்துகொள்ளும் Into The Wild நிகழ்ச்சியின் முன்னோட்ட அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பியர் கிரில்ஸ் புல்லட் வாகனத்தில் சீறிப் பாய்ந்தப்படி செல்ல, நடிகர் ரஜினிகாந்த் நான்கு சக்கரங்களை கொண்ட ஏடிவி வாகனத்தில் காட்டுக்குள் பயணிக்கிறார்.
தமிழ் திரைப்படத்தில் ரஜினிக்கு வைக்கப்படும் ஓப்பனிங் சீனைப் போல இந்த காட்சிகளும் மாஸாக இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பட மூலாதாரம், Discovery
பந்திபூர் காட்டில் என்ன சிறப்பு?
கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர் தேசிய பூங்கா அங்கிருக்கும் புலிகள் சரணாலயத்துக்கு பெயர் போனது. இந்தியாவிலேயே இரண்டாவது அதிக புலிகள் எண்ணிக்கை கொண்ட பூங்காவாக பந்திபூர் விளங்குகிறது.
யார் இந்த பியர் கிரில்ஸ்?
பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர். ஆனால் இவருக்கு எழுத்தாளர், தொலைக்காட்சி நெறியாளர் என்று பல முகங்கள் உண்டு.
டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பான மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் நாயகன் இவர்தான். ஆள் அரவமற்ற காடுகளில், மலைகளில், பாலைவனத்தில், பனிப் பிரதேசத்தில், எரிமலை அருகில் தொலைக்காட்சி குழுவினருடன் இறக்கிவிடப்படுவார் பியர் கிரில்ஸ், பல கிலோ மீட்டர்கள் அந்தக் கடுமையான சூழ்நிலைகளில் பயணித்து, அங்கு கிடைக்கும் இயற்கையான, தாவர, மாமிச உணவுகளை உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு உயிர் பிழைத்து, மனிதர்கள் வாழும் பகுதிக்கு எப்படி தப்பித்து செல்கிறார் என்பதே ஷோவின் ஈர்ப்பு.
இந்த சாகசப் பயணங்களுக்கு தம் படப்பிடிப்புக் குழுவினரோடு செல்வார் கிரில்ஸ்.
எல்லா சவால்களையும் முறியடித்து பியர் எப்படி உயிர்பிழைக்கிறார் என்பதே இந்த ஷோ. குறிப்பிட்ட நேரத்தில் சரியான திட்டமிட்ட இலக்கை கிரில்ஸ் அடையும்போது ஷோ முடியும்.
பிரிட்டனில் வெற்றிகரமாக ஓடிய இந்த ஷோ தற்போது சில ஆண்டுகளாக மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது. 15 பகுதிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஷோ 2006ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி ஒளிப்பரப்பானது.
தன்னுடைய பணிக் காலத்தில், காடுகள் மற்றும் மலைகளில் தான் கற்ற பாடங்களை நடைமுறையில் இவர் பயன்படுத்துவார். தன்னுடன் ஒரே ஒரு பையை மட்டுமே கொண்டு செல்லும் பியர் கிரில்ஸ், தண்ணீர், உணவு என எதையுமே கொண்டு செல்ல மாட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













