பிகில் சாதிக்குமா? விஜய் படத்துக்கு தொடரும் சவால்கள்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்திற்கு இதுவரை அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. மிக அதிக விலைக்கு திரையரங்கு உரிமைகள் விற்கப்பட்டிருக்கும் நிலையில், பிகில் திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு லாபத்தை அளிக்குமா?

இந்த ஆண்டு தீபாவளித் திருநாள் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் அன்று வெளியாக வேண்டிய திரைப்படங்கள் அக்டோபர் 25ம் தேதியே வெளியாகின்றன.

தொடக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மட்டுமே இந்தத் தீபாவளிக்கு வெளியாகுமென நம்பப்பட்டது. ஆனால், கார்த்தி நடித்த 'கைதி' படமும் தீபாவளிக்கே வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு திரைப்படங்கள் தவிர, இந்தித் திரைப்படமான 'Housefull 4' படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

பிகில் திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதாக, படத்தைத் தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் க்ரியேட்டிவ் இயக்குனரான அர்ச்சனா கல்பாத்தி தனது பேட்டிகளில் கூறிவருகிறார்.

இந்தப் படத்தின் திரையரங்க உரிமைகள் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இந்தப் படம் 600 திரையரங்குகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் திரையரங்க உரிமைகளை ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு திரைப்படச் சந்தைகளில், வேறு எட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன்.

விஜய்யின் முந்தைய இரண்டு படங்களான சர்கார், மெர்சல் ஆகிய இரு திரைப்படங்களைவிட பிகில் திரைப்படம் அதிக தொகையை திரையரங்குகளில் வசூலிக்கும் என படத்தோடு தொடர்புடையவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான், திரையரங்க உரிமைத் தொகையான 80 கோடி ரூபாயை திரும்பப் பெற முடியும்.

பிகில் திரைப்படம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளிக்கு கூடுதலான திரையரங்குகளில் அந்தப் படத்தை வெளியிடலாம் என தயாரிப்புத் தரப்பு கருதியிருந்தது.

ஆகவே, தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய திரைப்படங்கள் பின்வாங்குமெனக் கருதப்பட்டது. ஆனால் கைதி திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் உறுதியாக இருந்துவிட்டது.

தற்போது கைதி திரைப்படம், தமிழ்நாட்டில் சுமார் 250 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால் பிகில் திரைப்படத்திற்குக் கிடைக்கும் திரையரங்கங்கள் குறைந்தது ஒரு புறமிருக்க, அந்தப் படத்தின் பேரம் பேசும் திறனும் குறைந்தது.

அஜீத் நடித்த விஸ்வாசம் திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்துடன் வெளியாகி, பெரும் வெற்றிபெற்றதைப் பலர் சுட்டிக்காட்டி, அதுபோல பிகில் திரைப்படமும் வசூலை குவிக்க முடியும் என்கிறார்கள்.

விஸ்வாசம், பேட்ட ஆகிய திரைப்படங்கள் பொங்கல் திருநாளுக்கு வெளியாகின. அப்போது கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் விடுமுறை நீடித்ததால், இரு திரைப்படங்களுமே ஓரளவு வசூலைப் பெற முடிந்தது.

ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. முதலாவதாக, தீபாவளிக்கான விடுமுறை தினங்கள். இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று நாட்கள்தான் முழுமையான அளவில் திரையரங்குகள் நிரம்பும்.

திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்திருப்பதால் அன்றைய தினமும் திரையரங்குகள் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு நாட்களிலிருந்துதான் பிகில் படத்தின் பெரும்பாலான திரையரங்க வசூலை மீட்க வேண்டும். பெரும்பாலான திரையரங்குகள் பிகில் திரைப்படத்திற்காக 'மினிமம் கேரண்டி'யாக ஒரு தொகையை அளித்துள்ளனர்.

ஆகவே படம் வெளியாகும் அக்டோபர் 25ஆம் தேதியன்று அதிகாலை காட்சிகள் நடைபெற்றால், ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்துவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வசூலைப் பெற முடியும். ஆனால், இதுவரை தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியளிக்கவில்லை.

"அனுமதியளிக்காத நிலையில், எந்தத் திரையரங்காவது அதிகாலை காட்சிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்கள்.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது தமிழக அரசு குறித்து படத்தின் கதாநாயகன் விஜய் வெளியிட்ட கருத்துகளின் காரணமாகவே மாநில அரசு பாராமுகமாக நடந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.

இருந்தபோதும், பிகில் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. ஏதோ ஒரு வகையில் சமரசம் எட்டப்பட்டு, காலைக் காட்சிகள் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

"அதிகாலை 4 மணி காட்சி இல்லாவிட்டாலும் ஏழு அல்லது 8 மணி காட்சியாவது நிச்சயம் நடக்கும். முதல் நான்கு நாட்களுக்கு திரைப்படம் நன்றாக ஒடும் பட்சத்தில் பிகில் லாபத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது," என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான ஸ்ரீதர் பிள்ளை.

விஜயைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படமும் 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படமும் வெளியானது.

பிகில், கைதி ஆகிய இரு திரைப்படங்களுமே தணிக்கையில் யு/ஏ சான்றிதழைப் பெற்றிருக்கின்றன. பிகில் 179 நிமிடங்கள் - அதாவது மூன்று மணி நேரம் - நீளமுடையதாக உருவாகியுள்ளது. கைதி 147 நிமிடங்கள் நீளமுடையது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :