You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணைக்கொலை செய்து கொண்ட பாராலிம்பிக் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை மற்றும் பிற செய்திகள்
கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார் பெல்ஜிய நாட்டு பாராலிம்பிக் வீராங்கனை மாரீகே வெர்வோர்ட். அவருக்கு வயது 40.
2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றவர் மாரீகே வெர்வோர்ட். ரியோ 2016 பாராலிம்பிக் போட்டிகளில் மேலும் இரண்டு பதக்கங்களை இவர் பெற்றார்.
குணப்படுத்த முடியாத தசை சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
கருணைக்கொலை சட்டபூர்வமானதாக இருக்கும் பெல்ஜியத்தில், மருத்துவர் ஒருவரின் உதவியோடு தனது வாழ்க்கையை முடித்து கொள்ள அனுமதிக்கும் ஆவணங்களில் 2008ம் ஆண்டிலேயே மாரீகே வெர்வோர்ட் கையெழுத்திட்டிருந்தார்.
மாரீகே வெர்வோர்ட் பாதிக்கப்பட்டிருந்த நோயால், அவரது காலில் தொடர்ந்து வலியும், பக்கவாதமும் இருந்ததால் அவரால் சரியாக தூங்க முடியாமல் போனது.
2016ம் ஆண்டு பிபிசி வானொலி 5யில் வழங்கிய நேர்காணலில், "உங்களது தசை சிதைவு நோயோடு வலியையும், சிகிச்சைகளையும் தாங்கி கொண்டு சாதனைகளை படைத்து, புன்முறுவலோடு எப்படி இருக்க முடிகிறது என்று பலரும் என்னை கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை சக்கர நாற்காலியோடு விளையாடுவதும், போட்டியிடுவதும் ஒரு வகை சிகிச்சையே" என்று கூறியிருந்தார் மாரீகே வெர்வோர்ட்.
செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவரின் உதவியோடு தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் மாரீகே வெர்வோர்ட்.
இந்தியா மீது மலேசியா உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா? மகாதீர் என்ன சொல்கிறார்?
மலேசிய பாமாயிலைப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக சங்கம் ஒன்று அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இந்தியா குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) புகார் ஏதும் தெரிவிக்கப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இது தொடர்பாக தம்மிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மலேசியப் பாமாயிலைப் புறக்கணிக்குமாறு இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
"எனவே தற்போதைய சூழலில் இந்தியா குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் மலேசியா புகார் அளிக்காது," என்றும் மகாதீர் தெளிவுபடுத்தினார்.
செய்தியை வாசிக்க: இந்தியா மீது உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா மலேசியா? மகாதீர் என்ன சொல்கிறார்?
வடகிழக்குப் பருவமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா?
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மேம்படவில்லை. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. திங்கட்கிழமையன்று தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை விட்டுவிட்டுப் பெய்துவந்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் ஆகிய இடங்களில் 18 மி.மீ. மழை பெய்திருக்கிறது.
செய்தியை வாசிக்க: வடகிழக்குப் பருவமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா?
கோட்டாபய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பானத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் கல்வியங்காடு ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.
செய்தியை வாசிக்க: கோட்டாபய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
'அழகி' நந்திதா தாஸ் அழகு பற்றி என்ன சொன்னார்? கறுப்பின் கண் மிக்கதா அழகு?
வெள்ளைத் தோல் மீதான மோகம் குறித்தும் அழகு குறித்தும் பிபிசி '100 பெண்கள்' நிகழ்வில் பேசினார் முன்னணி இந்திய நடிகையும், இயக்குநருமான நந்திதா தாஸ். தமிழில் அழகி படத்தின் மூலம் தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமானவர் நந்திதா.
முற்போக்கான கருத்துகளோடு திரைத்துறையில் இயங்கிவரும் நந்திதா டெல்லியில் நடந்துவரும் 100 பெண்கள் நிகழ்வில் பிபிசியின் யோகிதா லிமாயி உடன் விவாதம் நடத்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்