You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகிழக்குப் பருவமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா?
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மேம்படவில்லை. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. திங்கட்கிழமையன்று தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை விட்டுவிட்டுப் பெய்துவந்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் ஆகிய இடங்களில் 18 மி.மீ. மழை பெய்திருக்கிறது.
மத்திய மேற்கு - தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாலும் அரபிக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடிப்பதாலும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் மிக கன மழை பெய்யுமென்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
இந்த மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவின் காரணமாக நீலகிரி மலை ரயில் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானி சாகர் அணை திங்கட்கிழமை இரவு 102 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டுவருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயராதது ஏன்?
கடந்த இரண்டு நாட்களில் சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்திருக்கிறது. சென்னை மாவட்டத்தில் மட்டும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை வழக்கமாக 149.7 மில்லி மீட்டராகும். ஆனால், இந்த ஆண்டு 170.3 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 14 மி.மீ. அதிகமாகும். சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் 20 சதவீதம் அளவுக்கு அதிக மழை பெய்திருக்கிறது.
ஆனால், இந்த மழையின் காரணமாக சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயரவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டில் பெருமழையின் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திய செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 1.69 அடிதான். இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. நீர் வரத்து வெறும் 28 கன அடியாக உள்ளது.
அதேபோல, 3.23 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 1.27 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது என்றாலும் இந்த நீர், மழை மூலமாக வரவில்லையென பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணா திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர்தான் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரம்பியிருக்கிறது என்கிறது பொதுப் பணித் துறை. இந்த நீர்த் தேக்கத்திலிருந்து புழல் நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 440 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது, 0.5 டிஎம்சி நீரே நிரம்பியுள்ளது.
ஆனால், சென்னையில் பெருவெள்ளம் தாக்கிய 2015ஆம் ஆண்டிலும் ஐந்து நாட்களுக்கு முன்புவரை, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் சுத்தமாக நீரின்றி இருந்தது என்பதையும் அடுத்த ஐந்து நாட்களில் பெய்த மழையில் முழு நீர்த்தேக்கமும் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டது என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் பருவமழை தற்போதுதான் துவங்கியிருக்கிறது. ஆகவே வரும் நாட்களில் பெய்யும் மழையில் இந்த ஏரிகள் நிரம்பிவிடும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்