ராணியாக முயன்ற பெண் தளபதியின் அதிகாரத்தை பறித்த தாய்லாந்து மன்னர் மற்றும் பிற செய்திகள்

மன்னருக்கு எதிராகவும், விசுவாசமின்றியும் செயல்பட்டதாக கூறி, தாய்லாந்தின் அரசுப்படையை சேர்ந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கிற்கு வழங்கப்பட்டிருந்த அரச தகுதியை நீக்கியுள்ளார் தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன்.

பெண் தளபதியான சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் பேராசையோடு செயல்பட்டதாகவும், அரசிக்கு இணையான நிலைக்கு தன்னை உயர்த்தி கொள்ள முயன்றதாகவும் தாய்லாந்து அரசவை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் மன்னர் சுதிடா என்ற பெண்ணை மணந்து அவரை அரசியாக்கினார். இவர் அரசரின் நான்காவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது இந்த திருமணம் நடந்த இரண்டாவது மாதத்தில் சின்னிநாட்டிற்கு இந்த அரச தகுதி வழங்கப்பட்டது.

தாய்லாந்து ராணுவத்தில் ஒரு தளபதியாகவும் பணியாற்றிய சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக், விமானியும், செவிலிதாயும், மெய்காப்பளரும் ஆவார்.

கடந்த 100 ஆண்டுகளில், தாய்லாந்து அரச அதிகார குழுவில் இந்த தகுதியை பெற்றுள்ள முதல் பெண் சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு 6 மாதம்: இதுவரை நடந்தது என்ன?

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 மாதங்களாகின்றன.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்கள் மீது ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன், கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பேரி, ஷங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் 259 பேர் இறந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தனர்.

பிபிசி 100 பெண்கள் 2019 - பெண்கள் கையில் உலகின் எதிர்காலம்

"உலகம் முழுவதும் உள்ள பெண்களின் எதிர்காலம் எப்படி இருக்கிறது" என்று இந்த ஆண்டு (2019) பிபிசியின் 100 பெண்கள் கேட்கிறார்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், 'பிபிசி 100 பெண்கள்' என்ற பெயரில் தத்தமது துறைகளில் சாதித்த, கவனத்தை ஈர்த்த 100 பெண்களின் கதைகளை உலகம் முழுவதுமுள்ள வாசகர்களிடையே பகிர்ந்து வருகிறோம்.

மகாராஷ்டிரா, ஹரியாணா எக்சிட்போல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - கணிப்புகள் சொல்வதென்ன?

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (திங்கள்கிழமை) ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரம்; நிரம்பும் அணைகள்

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 சென்டி மீட்டர் மழையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :