You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து இளவரசியின் பிரதமர் ஆசை; மன்னரின் கோபத்தால் பின்வாங்கும் கட்சி
தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்து அந்நாட்டு மன்னர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக அறிவித்திருந்த கட்சி தற்போது பின்வாங்கியுள்ளது.
அவரை வேட்பாளராக அறிவித்திருந்த தாய் ரக்சா சார்ட் கட்சி, "மன்னருக்கும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விஸ்வாசத்துடன் இருந்து, மன்னரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாக" அறிவித்துள்ளது.
இது குறித்து இளவரசி இன்னும் வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, "அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்," என்று மன்னர் வஜ்ராலங்கோன் நேற்று தெரிவித்திருந்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை தாய்லாந்து அரசரின் மூத்த சகோதரி உபான்ராட் மகிதூன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது தமது அரசியல்சாசன உரிமை என நேற்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
யார் இந்த இளவரசி?
1951இல் பிறந்த இளவரசி உபான்ராட் ராஜகன்யா சிறிவதனா பர்னாவாதி, 2016இல் மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் மூத்த மகளாவார்.
அமெரிக்காவில் உயர்கல்வி கற்ற அவர், 1972இல் அமெரிக்க குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்தபோது, அவருடைய அரச பட்டங்களை அவர் துறந்தார்.
ஆனால், ராஜ மரியாதையை உறுதி செய்யும் கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்படும் தாய்லாந்து அரச குடும்பத்தின் மதிப்பு பெறுகின்ற உறுப்பினராகவே அவர் வலம் வந்தார்.
2001இல் மணமுறிவு செய்துகொண்ட பின், தாய்லாந்து திரும்பிய அவர், மன்னர் குடும்பத்தின் நடவடிக்கைகளில் மீண்டும் பங்கேற்கத் தொடங்கினார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கிவரும் உபான்ராட் பல 'தாய்' மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இளவரசி உபான்ராட் மூன்று குழந்தைகளுக்கு தாய். அவர்களில் ஒருவர் 2004இல் உண்டான சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தார்.
67 வயதாகும் உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும்.
தாய் ரக்சா சார்ட் கட்சியின் பின்னணி
தாய் ரக்சா சார்ட் முன்னாள் பிரதமர் தக்சின் சின்னவாட்டின் கட்சியாகும்.
ஒரு ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக தக்சின் சின்னவாட் 2008ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தை விட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார்.
பிரதமர் பதவியில் இருந்த தக்சின் சின்னவாட்டின் சகோதரி இங்லக் சின்னவாட் கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
இங்லக் சின்னவாட்டுக்கு கிராமப்புற விவசாயிகளுக்கு அரிசி கொள்முதல் விலையில் மானியம் அளித்தது தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை 2017இல் வழங்கப்பட்டது.
ஆனால், தண்டனை அளிப்பதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :