You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜஸ்டின் ட்ரூடோ: இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்
கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், அந்நாட்டின் தேசிய ஊடகமான சிபிசி ஊடகத்தின் கணிப்பின்படி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
லிப்ரல் கட்சியின் ஆதரவாளர்கள் இதனை விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துவரும் வேளையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ வென்றால் அது சிறுபான்மை ஆட்சியாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு சாதகமாக வருவதை அறிந்தவுடன், மத்திய கனடாவில் அமைந்திருக்கும் ரெஜினாவிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில் இருந்த உற்சாகம் குறைய தொடங்கிவிட்டது.
இந்த நாடளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என்று சில நாட்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இப்போதைய தேர்தல், அப்போதைய வெற்றியை ஒப்பிட்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கனடாவின் புதிய அரசை அமைக்கும் கட்சியை தேர்தெடுப்பதற்காக மக்கள் வாக்களித்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப முன்னணி நிலவரங்கள் காட்டின.
ஜஸ்டின் ட்ரூடோவின் லிப்ரல் கட்சியும், ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சுமார் 34% வாக்குகளை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ ஷீரிடம் இருந்து கடும் போட்டியை ட்ரூடோ எதிர்கொண்டார்.
நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்த ஜக்மித் சிங், பசுமை கட்சியை சேர்ந்த எலிசபெத் மே மற்றும் புளக் கியூபெக்வா கட்சியை சேர்ந்த கியூபெக் ஆகியோரும் இந்த தேர்தலில் வெல்ல போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில்தான் கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண்கள் போட்டியிட்டனர்.
ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை தொடக்க முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியை கொண்டாட தொடங்கியுள்ளனர்.
கனடா இதுவரை கண்டிராத மிக நெருக்கமான போட்டி ஏற்பட்டுள்ள இந்த தேர்தலில், லிபரல் அல்லது கன்சர்வேடிவ் கட்சியினர் யார் முன்னேறினாலும் அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, மற்ற நாடுகளை போன்று கனடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கும் மக்களிடையே காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்