You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
3-0: டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்தியா - 5 முக்கிய காரணங்கள் #INDvSA
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியசாத்தில் வென்ற இந்தியா 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்தது. ரோகித்சர்மா இரட்டை சதமடித்தார். இதை தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி 132 ரன்களில் ஆட்டமிழந்ததால் போட்டியையும், தொடரையும் இந்தியா வென்றது.
மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான தொடராக கருதப்பட்ட இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்ததற்கு 5 முக்கிய காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா
இந்த தொடரை இந்திய வென்றதற்கு முக்கிய காரணம், அணியின் பந்துவீச்சாளர்கள் தான். பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் பந்துவீச்சாளர்கள் எடுக்காமல் வெல்ல முடியாது என்ற நிலையில் இந்த தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர்.
வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, சுழல்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் மிக சிறப்பான பங்களிப்பு இந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு பெரிதும் உதவியது.
தொடக்க ஆட்டக்காரராக அசத்திய ரோகித்
ஆட்ட நாயகனாகவும் , தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்ட ரோகித்சர்மா இந்த தொடரில் அணியின் வெற்றிகளில் கணிசமான பங்கு வகித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோகித் சர்மா, கடைசி டெஸ்டில் இரட்டை சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி அவர் இந்த தொடரில் எடுத்த ரன்கள் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கேப்டன் கோலியின் பங்களிப்பு
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவிர பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் அவரது தலைமை இந்த தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்ததற்கு பெரும் காரணமாக அமைந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் விராட் கோலி இரட்டை சதமடித்தார்.
ஜொலிக்காத தென்னாப்பிரிக்க வீரர்கள்
ஹாஷிம் ஆம்லா, டுமினி, டிவில்லியர்ஸ் போன்ற பல முன்னணி வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில் இந்த தொடரில் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அதிகம் இல்லை.
அதே வேளையில் ஓரிரு இன்னிங்ஸ்களை தவிர டி காக், அணித்தலைவர் டு பிளசிஸ் ஆகியோரும் சிறப்பாக விளையாடதது தோல்விக்கு வழிவகுத்தது.
இந்திய பேட்ஸ்மேன்களின் அதகளம்
தொடரை 3-0 என இந்தியா வென்றதற்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணம்.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் இரட்டை சதமடித்த நிலையில், மாயங்க் அகர்வால் மற்றும் ரஹானே ஆகியோரும் இந்த தொடரில் சதமடித்தனர்.
பல தருணங்களில் ரவீந்திர ஜடேஜா விரைவாக ரன்கள் சேர்த்ததும், முதல் போட்டியில் புஜாராவின் சிறப்பான பேட்டிங்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்