You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செனூரன் முத்துசாமி: இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர் INDvsSA
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர்.
அவரது பெயர் செனூரன் முத்துசாமி.
என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா?
ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர்.
தமிழ் தெரியாது
25 வயதாகும் செனூரனின் குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டது.
தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த செனூரன் முத்துசாமி, தனது பூர்வீகம் சென்னை என்றும், நாகப்பட்டினத்தில் உறவினர்கள் உள்ளனர் என்றும் கூறுகிறார்.
"தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பனில் வசிக்கிறோம். அங்கே எங்களது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். என்னுடைய குடும்பத்தில் இன்னமும் சிலர் தமிழ் பேசுகிறார்கள். துரதிருஷ்டவசமாக எனக்கு தமிழ் பேசத்தெரியாது. ஆனால் மெல்ல மெல்ல தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் செனூரன் முத்துசாமி.
'சங்கக்காரா எனது ஆதர்சம்'
முத்துசாமி பிரதானமாக ஒரு சுழற்பந்து வீச்சாளர். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கிலும் அசத்தியிருக்கிறார்.
தமக்கு இலங்கையைச் சேர்ந்த ரங்கனா ஹெராத், சங்கக்காரா ஆதர்சம் என்கிறார் செனூரன்.
உள்ளூர் போட்டிகளில் ஒரு பக்கம் விக்கெட் வீழ்த்திக்கொண்டே எதிரணியின் ரன் ரேட்டையும் கட்டுப்படுத்தி இருக்கிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் 3403 ரன்கள் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 129 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு சிறந்த வீரர் விருதையும் வென்றிருக்கிறார்.
இந்தியாவின் சுழற்பந்துக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் செனூரன் பந்துவீசுவாரா என்பதை பார்க்க இந்திய ரசிகர்களும் ஆர்வமாக இருக்கக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்