You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான்கு கட்ட அகழாய்வுகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் சமீபத்தில் முடிவடைந்தன.
இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வின் இறுதிக் கட்டத்தில் சுட்டமண்ணால் ஆன வடிகால் அமைப்பு கிடைத்திருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட மாநிலத் தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
YD6/3 என்ற ஆய்வுக் குழியில் பணிகள் நடந்தபோது 47 சென்டிமீட்டர் ஆழத்தில் பானையின் விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டது. அதனை கவனமாக தொடர்ந்து வெளிப்படுத்தியபோது, சிவப்பு வண்ணத்தில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் கிடைத்தன. இந்தக் குழாய்கள் 60 சென்டி மீட்டர் நீளமும் 20 சென்டி மீட்டர் அகலமும் கொண்டிருந்தன.
இந்தக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் விளிம்புகளைப் போல ஐந்து வளையங்கள் உள்ளன. இந்த இரு குழாய்களும் ஒன்றோடு ஒன்று நன்கு பொருத்தப்பட்டிருப்பதால், நீரைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல இவை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அகழாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சுடுமண் குழாய்க்குக் கீழே, பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் காணப்பட்டன. ஆகவே இந்த இரண்டு குழாய்ப் பாதைகளும் வெவ்வேறுவிதமான பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
பீப்பாய் வடிவிலான குழாயில் வடிகட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாயின் இறுதிப் பகுதி இரண்டடுக்குப் பானை ஒன்றில் சேர்கிறது. ஆகவே இந்தப் பீப்பாய் வடிவிலான குழாய் மூலம் அந்தப் பானையில் திரவப் பொருளைச் சேகரித்திருக்கலாம் என கள ஆய்வாளர்கள் கருதுகின்றன.
இதே குழியின் மற்றொரு பகுதியில் திறந்த நிலையில் நீர் செல்லும் வகையிலான செங்கலால் கட்டப்பட்ட வடிகால் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது 5.8 மீட்டர் நீளமும் 1.6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த வடிகால் அமைப்பின் மீது ஓடுகள் பாவப்பட்டிருந்தன.
இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஏற்கனவே நடத்திய இரண்டாம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானத்தினால் ஆன வடிகால் அமைப்பின் தொடர்ச்சியே இந்த வடிகால் அமைப்பாகும்.
இதே இடத்தில் தொடர்ந்து நடந்த அகழாய்வுப் பணியில் 52 சென்டி மீட்டர் ஆழத்தில், கூரை ஓடுகள் செங்குத்தாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டன. மேலும் ஒரு செங்கல் கட்டடமும் வெளிப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்