You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பெண்
- எழுதியவர், மரிய மைக்கேல்
- பதவி, பிபிசி தமிழ்
இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.
இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி அகழ்வாய்வை, தமிழக அரசே நடத்தவும், அங்கு கிடைத்த பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க இடம் ஒதுக்கப்படவும் வழக்கறிஞர் கனிமொழி மதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடுத்த பொதுநல வழக்கும் முக்கிய பங்காற்றியது.
கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதில் முக்கியமான பங்காற்றியுள்ள வழக்கறிஞர் கனிமொழி மதியை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.
கீழடியில் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருந்தபோதுதான், அது பற்றிய செய்திகள் வெளிவந்ததை பார்த்து வியப்படைந்துள்ளார் வரலாற்று மாணவியான கனிமொழி மதி.
திண்டுக்கல் பக்கத்திலுள்ள கிராமம் ஒன்றுதான் சொந்த ஊர் என்பதால் மதுரை பக்கத்திலுள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி என்றவுடன் இவருக்கு ஆர்வம் மேலிட்டுள்ளது.
கீழடியில் கட்டட சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கேள்விப்பட்டபோது இவரது ஆர்வம் இன்னும் அதிகமானது" என்கிறார் கனிமொழி.
கீழடி அகழாய்வில் கிடைத்தது என்ன?
கிணறு அமைப்பு, குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவது, கொண்டு செல்வது போன்றவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அங்கு சென்று பார்த்துள்ளார்.
இதற்குப் பிறகு நடக்கும் தொல்லியல் ஆய்வுகளில் இன்னும் அதிகமானவை கண்டுபிடிக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், அகழ்வாய்வு தொடராமல் இருந்ததும், கீழடியில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைக்காமல் எடுத்து செல்ல முற்பட்டதையும் பார்த்து தாம் ஆதங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கனிமொழி.
பின்னர் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் அவர்.
கல்லூரி நாட்களில் அருட்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருட்களை பற்றி அறிந்து வைத்திருப்பதால், இந்த பொருட்களை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டால், அவற்றை திருப்பி கொண்டுவர மிகவும் கடினம் என அவருக்கு புரிந்தது.
எனவே, பொருட்களை எடுத்து செல்வதை தடுத்து, உள்ளூரில் வைத்து காக்க ஏற்பாடு செய்யும் நோக்கத்தோடு இந்த பொதுநல வழக்கை தொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போதைய மக்கள் படிப்பறிவோடு வாழ்ந்து வந்துள்ளனர் என்கிற முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதை பார்த்து பெருமகிழ்ச்சியடைவதாக கனிமொழி தெரிவித்தார்.
அக்கால மக்கள் எதார்த்தமாக, சாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், நாம் கடைபிடிக்கும் சில மூடநம்பிக்கைகளால் எதார்த்தமான வாழ்க்கையை தொலைத்துவிட்டோமோ எண்ண தோன்றுகிறது என்கிறார் அவர்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புறநானூற்றுப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மனிதரை மதிக்கக்கூடிய அக்கால மக்களின் வாழ்வை இந்த பாடல் உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.
அறிவியல் கருத்துகளை எதார்த்தமாக உள்வாங்கி கொண்டு வாழ்ந்த சமூகமாக 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த சமூகத்தின் அடிப்படை இருந்திருக்கிறது என்றால், இந்த காலத்திற்கு பின்னர் வாழ்ந்தவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய, இந்த கீழடி கண்டுபிடிப்பு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று கனிமொழி தெரிவித்தார்.
இந்த பொதுநல வழக்கில் பெரிய தடைகளை எல்லாம் சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர், இந்த வழக்கை மதுரையில் தொடர வேண்டியிருந்தது என்பதால், கடைசி நேரத்தில் அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வருவது தெரியவந்தபோது, அன்றைய நாளில் சரியாக ஆஜராவதில் சில சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார் கனிமொழி.
ஆனால், இந்த பொதுநல வழக்கு ஒரு நாள் கூட பாதிப்பு இல்லாமல் நடைபெற வேண்டும். தனிப்பட்ட வழக்குகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஒருநாள் கூட ஆஜராகாமல் இந்துவிட கூடாது என்பதில் தான் மிகவும் கவனமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஏதாவது சிக்கல் என்றால், அது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே பாதிப்பு என்பதால் ஒவ்வொரு நாளும் சரியாக இந்த வழக்கில் ஆஜரானதாக கூறினார் கனிமொழி.
மதுரையில் தனக்கு முத்துமணி என்ற வழக்கறிஞர் உதவியதாகவும் அவர் கூறினார்.
"மத்திய தொல்லியல் துறை எங்கு அகழ்வாராய்ச்சி செய்தாலும், அறிக்கை வெளியிடுவதில்லை. ஆதிச்சநல்லூரில் இந்த நிலைதான் ஏற்பட்டது. மாநில அரசு தமிழகத்திலுள்ள பல இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, வரலாற்று புதையல்களை வெளிக்கொணர செய்வதே தனது நோக்கம்," என்கிறார் வழக்கறிஞர் கனிமொழி மதி.
யார் இந்த கனிமொழி மதி?
திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தேவத்தூர் கிரமத்தை சேர்ந்தவர் கனிமொழி மதி. எட்டாம் வகுப்பு வரை அதே கிராமத்தில் பயின்றுவிட்டு, 12ம் வகுப்பு வரை திண்டுக்கல்லில் கல்வி கற்றுள்ளார்.
திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியில் வரலாறு படித்து விட்டு, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.
மூத்த வழக்கறிஞர்களோடு எட்டு ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு, 2009ம் ஆண்டு தனியாக வழக்குகளை எடுத்து வாதிட தொடங்கியுள்ளார்.
"எனது தந்தை, பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர் என்பதால், அதிக புத்தகங்கள் வீட்டில் இருந்தன. அவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது," எனத் தெரிவித்தார் கனிமொழி.
மேலும், பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்று கொடுப்பதிலும் இவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்