You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசுரன்: வெற்றிமாறன் - தனுஷ் இணையும் நான்காவது படம் - வெற்றி தொடருமா?
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீடு முதலே அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் இதுவரை வந்த திரைப்படங்கள் குறித்த 4 முக்கிய அம்சங்களை காண்போம்.
1. 2007-இல், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் பொல்லாதவன். இது வெற்றிமாறனுக்கு முதல் திரைப்படமும்கூட. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவருக்கு இணையாக இந்த படத்தில் கவனம் பெற்றது ஒரு பல்சர் பைக்தான். ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை இதில் இருந்தது. திவ்யா ஸ்பந்தனா இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு காதலியாக நடித்திருந்தார்.
கிஷோர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோரின் நடிப்பு இந்த படத்தில் மிகவும் பேசப்பட்டது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் வட சென்னையின் பிரத்யேக தமிழ் ஸ்லாங் ( மொழி வழக்கு ) சிறப்பாகவும், இயல்பாகவும் அமைந்திருந்தாக பாராட்டப்பட்டது.
2. வெற்றிமாறன், தனுஷ் இணைந்த இரண்டாவது திரைப்படம் தேசிய விருது பெற்ற ஆடுகளம்.
தென் தமிழகத்தில் பிரபலமாக உள்ள சேவல் சண்டை பற்றிய படம் என்பதால் இந்த படம் குறித்து ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த திரைப்படம் 2011-இல் வெளிவந்து மிகவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் கதையாக்கம், வசனம், நடிப்பு ஆகியவையும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. தனுஷ், வெற்றிமாறன் உள்பட ஆடுகளம் படத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.
இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் திரிஷா ஆரம்பத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது. பின்னர் எதிர்பாராவிதமாக டாப்ஸி ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார்.
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காம்பினேஷன் மதுரை வட்டாரத்தில் நடக்கும் கதையை, அந்த மொழி வழக்கில் எவ்வாறு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற ஆரம்ப ஐயங்கள் படம் வெளிவந்தவுடன் முற்றிலும் காணாமல் போனது எனலாம்.
3. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய மூன்றாவது படம் வட சென்னை.
வடசென்னை முதல் பாகம் 1980களின் பிற்பகுதியில் இருந்து 2000-களின் முற்பகுதிவரையில் விரிந்தது.
தனுஷிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இடையிலான காதல், ஆண்ட்ரியாவின் பாத்திரம் ஆகியவை இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. அடுத்த பாகமான "வட சென்னை 2 - அன்புவின் எழுச்சி" குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.
படம் முழுவதும் தோன்றும் ஏராளமான கதாப்பாத்திரங்களும், சிறைச்சாலை செட்டும் ஒரு நிமிடம்கூட தொய்வில்லாமல் படத்தை நகர்த்தின.
4. தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்து வெளிவந்த அசுரன், டீசரில் இருந்தே ரசிகர்களின் மிகுதியான எதிர்பார்ப்புகளை பெற்றது.
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த நாவலை அப்படியே தன் படத்தில் கொண்டு வரமுடியாது என்றாலும், தன்னால் முடிந்தளவு சமூகப்பார்வையுடன் இந்த கதையை திரைப்படமாக்கி உள்ளதாக வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.
படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஒரு தேசிய விருது இந்த படத்துக்கு நிச்சயம் என்று பதிவிட்டு வருகின்றனர். வரும் நாட்களில் இதற்கான தெளிவான பதில் கிடைத்துவிடும் என்று நம்பலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்