You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Joker - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை பிரதான பாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது.
பேட்மேன் படங்களில் எந்த நோக்கமும் இல்லாமல், எங்கிருந்து வந்தான் எனத் தெரியாமல் வில்லத்தனம் செய்யும் ஜோக்கர் பாத்திரத்திற்கு, ஒரு பின்னணியைக் கொடுக்கிறது இந்தப் படம்.
1981ஆம் ஆண்டு. கோதம் நகரம். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது நகரம். இந்த ஊரில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்தர் ஃப்ளெக் (ஜாக்வின் ஃபோனிக்ஸ்) தன் தாயுடன் வசித்துவருகிறான். சம்பந்தமில்லாத தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் பிரச்சனையும் ஆர்தருக்கு இருக்கிறது.
ஒரு மிகப் பெரிய 'ஸ்டாண்ட் - அப்' காமெடியனாக வரவிரும்பும் ஆர்தருக்கு கிடைப்பதென்னவோ, கடைகளுக்கு வெளியில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் வேலைதான். அதிலும் சில சமயம் அடிவாங்க நேர்கிறது. விரக்தியும் நிராசையும் மிகுந்த வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் ஆர்தர், ஒரு தருணத்தில் தாங்க முடியாமல் மூன்று கொலைகளைச் செய்துவிடுகிறான்.
அதைத் தொடர்ந்து கோதம் நகரில் நடக்கும் போராட்டம், ஆர்தருக்கு தன் வாழ்க்கை குறித்து தெரியவரும் உண்மைகள் ஜோக்கரின் எதிர்காலத்தையே மாற்றிவிடுகின்றன.
கோதம் நகரத்தின் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தில் கடந்த பல ஆண்டுகளில் சீஸர் ரொமெரோ, ஜாக் நிக்கல்சன், ஹீத் லெட்ஜர் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்தப் பாத்திரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்கள்.
அதுபோலவே இந்தப் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய, கண்ணீரும் ரத்தமும் தோய்ந்த வண்ணத்தைக் கொடுத்திருக்கிறார் ஜாக்வின் ஃபோனிக்ஸ். டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடித்த பிறகு, வேறு யாரும் அந்த அளவுக்கு ஜோக்கருக்கு உயிர் கொடுக்க முடியுமா என நினைத்திருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் செல்கிறார் ஜாக்வின்.
படத்தின் கதை 1980களில் நடப்பதால், அதற்கேற்றபடி ஒரு நகரத்தை, துல்லியமாக உருவாக்கியிருப்பது அசரவைக்கிறது. படத்தின் பிற்பாதியில் சிறிது நேரம் தொய்வடையும் படம், இறுதியை நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது.
படத்தில் சில விஷயங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்கால பேட்மேனை இந்தப் படத்தில் குழந்தையாக சந்திக்கிறார் ஜோக்கர். அது பிற படங்களில் காலக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், சினிமாவை ஜாலியான பொழுதுபோக்காக பார்ப்பவர்களுக்கான படம் அல்ல இது. வித்தியாசமானவர்கள், குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு சமூகத்தில் எப்படி இடமளிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் இந்தப் படம், நேரம் செல்லச்செல்ல பார்ப்பவர்களை ரொம்பவுமே தொந்தரவு செய்கிறது. சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒருவர் அதற்குப் பதிலாக வன்முறையைக் கையில் எடுப்பது சரிதானா என்ற கேள்வியையும் படம் எழுப்புகிறது.
மிகச் சிறந்த நடிகர்களைக் கொண்டு, மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் இது. ஆனால், பார்த்து முடிக்கும்போது தீவிரமான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்