பிகில் இசை வெளியீட்டு விழா: அரசியல், சுபஸ்ரீ மரணம் - விஜயின் மெர்சல் பேச்சு

பிகில்

பட மூலாதாரம், TWITTER/ AGS ENTERTAINMENT

"என் நெஞ்சில் குடியிருக்கும்…" என்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசத் தொடங்கினார் நடிகர் விஜய். அதன் பிறகு அவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியாத அளவிற்கு அங்கு சூழ்ந்திருந்த அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்தான் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்திற்கு ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அப்படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன.

பிகில்

பட மூலாதாரம், TWITTER/SONYMUSICSOUTH

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்படத்தின் இசை நிகழ்ச்சியின் ஹைலைட், நடிகர் விஜயின் பேச்சு.

ரசிகர்களுக்காக மேடையில் 'வெறித்தனம்' பாட்டையும் பாடினார் விஜய்.

அதைத் தொடர்ந்து அவர் பேசிய பேச்சு மிகவும் சூசகமாக இருந்தது என்று கூறலாம். அவரது ரசிகர்களும், தமிழ்நாட்டு மக்களும் இதை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தனிக்கதை.

பிகில்

பட மூலாதாரம், TWITTER/SONYMUSICSOUTH

சரி. அவர் அப்படி என்ன பேசினார்?

பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து விஜய் பேசியிருக்கிறார். "யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள்" என்று சுபஸ்ரீ விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார் விஜய்.

அவர் அரசியல் பேசினாரா என்பது அதை கேட்கும் மற்றும் புரிந்து கொள்ளும் நபரையே சார்ந்தது. அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்.

  • அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம்.
  • சமூக வளைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்யுங்கள்.
  • என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்.
  • வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள்.
  • யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :