பறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி - எச்சரிக்கும் ஆய்வுகள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், ARY MUELLER, MACAULAY LIBRARY AT CORNELL LAB OF O
ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவித்துள்ளது.
ஜாவா மற்றும் இந்தோனீசியாவில் ஆசிய பாடும்பறவைகள் எண்ணிக்கை குறைபாடு தொடர்பான பிரச்சனையை அழுத்தமாக சுட்டிக்காட்டிய இரண்டாவது ஆய்வு, தற்போது அதிக அளவில் பறவைகள் அதன் இயல்பான சூழலில் வாழவிடாமல் கூண்டில் அடைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஓர் முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
உயிரியல் பாதுகாப்பு மற்றும் ஜர்னல்ஸ் சயின்ஸ் ஆகிய முக்கிய அறிவியல் சார்ந்த பத்திரிகைகளில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
விளைநிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த பறவைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அனைத்து பகுதிகளும் பறவைகளின் இயலப்பான சூழலை குலைக்கும் வண்ணம் மனிதர்களால் வாழ இயலாத இடங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த இடங்களை அந்நிய பகுதிகளாக, கிரகங்களாக இந்தப் பறவைகள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதகாவும் இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து செய்யும் யோசனையை திரும்பப் பெற்ற ரணில்

பட மூலாதாரம், Getty Images
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முற்பகல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் விசேட அமைச்சரவை கூட்டமொன்றை மாலை வேளையில் கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன்படி, விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கட்சி பின்னடைவு: ஐக்கிய அரசு அமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு

பட மூலாதாரம், AFP
இஸ்ரேலில் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது தலைமையிலான ஆளும் கட்சி பெரும்பான்மை பெற முடியாத நிலையில், எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட் கட்சியுடன் இணைந்து ஐக்கிய ஆட்சி அமைப்பதற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், நாட்டின் இரண்டு முன்னணி கட்சிகளும் ஆட்சியை அமைப்பதற்கு தேவையான வாக்குகளை பெறமுடியவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கான்ட்ஸ் உடனடியாகத் தொடக்கவேண்டும் என்று நெதன்யாகு வலியுறுத்தினார். ஆனால், ஐக்கிய அரசு தேவைதான் என்று கூறிய கன்ட்ஸ் அந்த அரசு தமது தலைமையில்தான் அமையவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள நெதன்யாகு தலைமையிலான ஐக்கிய அரசில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான்: சர்ச்சையாகும் இந்து மாணவியின் மரணம் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், VISHAL CHANDANI
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் லார்கானா நகரில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இந்து மாணவி நிம்ரிதா கழுத்து நெரிபட்டு உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்து, நீதித்துறை விசாரணை கோரியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையின்படி, நிம்ரிதாவின் கழுத்து நெரிபட்ட அடையளங்கள் உள்ளன, ஆனால் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை இறுதி அறிக்கை கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
நிம்ரிதா லார்கானாவில் உள்ள பெனாசிர் பூட்டோ மருத்துவ பல்கலைக்கழகத்தின், ஆசிஃபா பிபி பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த மாணவி. அவரது சடலம் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த விடுதி அறை எண் 3இல் இருந்து மீட்கப்பட்டது.
லர்கானாவின் எஸ்.எஸ்.பி,. மசூத் பங்காஷ் பிபிசியிடம் பேசினார். பிரேத பரிசோதனை நேரத்தில் நிம்ரிதாவின் சகோதரர் உடனிருந்தார். சம்பவம் நடந்த நேரத்தில் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இது தற்கொலையா அல்லது கொலையா என்று போலீசார் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

இந்தோனீசிய காட்டுத்தீயால் மலேசியாவில் புகைமூட்டம்: 2,000 பள்ளிகள் மூடல்

பட மூலாதாரம், BARCROFT MEDIA
இந்தோனீசிய காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது.
குறிப்பாக, மலேசியாவில் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவானது மெல்ல அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரண பாதிப்பு என்ற அளவில் தொடங்கி, தற்போது உடல்நலத்தைப் பாதிக்கும், உயிரையே காவு வாங்கும் என்கிற அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்து வருவது மலேசிய மக்களின் கவலையை அதிகரித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் மூன்று நிலைகளில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், புகைமூட்டத்தால் விடுமுறை நீடிக்கும் பட்சத்தில் அத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












