You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலிவுட் நடிகை சன்னி லியோனால் தொலைபேசி அழைப்பு தொல்லையில் சிக்கிக் கொண்ட இளைஞர்
சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றில், சன்னி லியோன் தவறுதலாக கூறிய தொலைபேசி எண்ணால், 26 வயதான புனீத் அகர்வால் பெரும் விரக்தியில் உள்ளார். காரணம், பலரும் சன்னி லியோனின் உண்மையான எண் என்று நினைத்து புனீத்துக்கு தொடர்பு அழைப்புகளால் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
’அர்ஜூன் பாட்டியாலா’ என்ற திரைப்படத்தில், சன்னி லியோன் புனீத்தின் தொலைபேசி எண்ணை திரைப்படத்தில் சொல்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஜூலை 26ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு பின்னர் தினமும் 100 தொலைபேசி அழைப்புகளுக்கு மேலாக தான் பெற்று வருவதாக அகர்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
தனக்கு தொடர்ந்து வழங்கப்படும் இந்த தொல்லையால் மிகவும் சோர்ந்து, விரக்தி அடைந்துள்ளதாகவும் அகர்வால் தெரிவித்தார்.
"இதற்கு மேல் என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. அதிகாலை நான்கு மணிவரை தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன" என்று விரக்தியோடு அவர் கூறினார்.
சட்ட நடவடிக்கை மூலம் இந்த திரைப்படத்தில் இருந்து தனது எண்ணை நீக்க செய்ய நினைக்கும் அளவுக்கு, இந்த தொலைபேசி அழைப்புகளின் தொல்லை அவரை இட்டு சென்றுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஆபாசப்பட நடிகை சன்னி லியோன், இப்போது இந்தியாவில் பாலிவுட்டில் நடிக்கிறார். கவர்ச்சி திரில்கள் மற்றும் வயதுவந்தோருக்கான நகைச்சுவை படங்களில் நடித்துள்ள இவர், கவர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
எனவே, பாலிவுட் திரைப்படத்தில் சன்னி லியோன் சொல்லுகின்ற தொலைபேசி எண்ணை, அவருடைய சொந்த எண் என நினைத்து, இந்தியாவிலுள்ளவர்கள், ஏன் உலக நாடுகளில் உள்ளவர்கள்கூட இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.
”இந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு தொலைபேசி எண்ணை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு முன்னால், இந்த எண்ணை அழைத்து சோதித்து பார்த்திருக்க வேண்டும்," என்று கோபப்படுகிறார் அகர்வால்.
இதுபற்றி கருத்து தெரிவிக்க அர்ஜூன் பாட்டியாலாவின் இயக்குநர் ரோஹித் ஜூக்ராஜ் சௌகான் மறுத்துவிட்டார்.
இந்த சினிமா, வெள்ளித்திரைகளில் வெளியானது தொடங்கி புனீத்தால் வேலை செய்ய முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியாக உட்கார்ந்து சாப்பிடவும் முடியவில்லை.
"இந்த தொலைபேசி எண்ணை மாற்ற முடியாது. இந்த எண் எனது வியாபாரத்தோடு தொடர்புடையது. பழைய நண்பர்கள் இந்த தொலைபேசி எண்ணைதான் வைத்திருக்கின்றனர்," என்கிறார் அகர்வால்.
இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைக்கின்ற ஒவ்வொருவரும் சன்னி லியோனிடம் பேச விரும்புவதாக தெரிவித்ததாகவும், இது தவறான எண் என்று சொல்லியபோதும் அவர்கள் நம்ப மறுப்பதாகவும் அகர்வால் கூறுகிறார்.
தொடக்கத்தில் 10 முறை தொலைபேசி அழைப்புகள் வந்தபோது, தன்னை யாரோ ஏமாற்றுவதாக சந்தேகப்பட்ட அகர்வால், அது தனது நண்பர் ஒருவராக இருக்கலாம் என்றும் எண்ணியுள்ளார்.
ஆனால், அழைப்புகள் தொடர்ந்து வந்த பின்னர்தான், தனது தொலைபேசி எண் பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதை அறிய வந்துள்ளார்.
அந்த தகவலை நம்பாத அவர், திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தபோது, தன்னுடைய தொலைபேசி எண்தான் சொல்லப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
காவல்துறையில் புகார் பதிவு செய்ய சென்றபோது, தொலைபேசியில் அழைப்பவர்கள் குற்றம் புரியவில்லை என்பதால், போலீஸாரால் உதவ முடியவில்லை.
எனவே, நீதிமன்றத்தை நாடி, இந்த தொலைபேசி எண்ணை நீக்க வேண்டுமென புகார் அளிக்கலாம் என்று காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திரைப்பட இயக்குநர் மீது வழக்கு தொடுப்பது தனது நோக்கமல்ல என்றும், தனது தொலைபேசி எண் இந்த திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தனது கோரிக்கை என்றும் அகர்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
Sunny Leone Interview | சன்னி லியோன் சிறப்பு பேட்டி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்