கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மூன்று மாதங்கள் தடை விதிப்பு மற்றும் பிற செய்திகள்

கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது.

ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மெஸ்ஸி மீதான இந்த தடை நீக்கப்படாவிட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெறவுள்ள போட்டிகளை அவர் தவறவிடக் கூடும்.

ஜம்மு - காஷ்மீரில் 25,000 கூடுதல் படைகள்: பதற்றப்படும் மக்கள் - என்ன நடக்கிறது?

மத்திய காவல் படைகள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பரவத் தொடங்கியதில் இருந்து காஷ்மீர் மக்களிடையே கடந்த சில நாட்களாக அச்ச உணர்வு நிலவுகிறது.

கூடுதலாக 100 கம்பெனி துணை ராணுவப் படைகள் அனுப்பப்படும் என்று கூறிய அந்த உத்தரவு ஜூலை 25 அன்று முதல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் நான்கு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை சேமிக்கத் தொடங்கிவிட்டதாகவும், ஒரு வாரத்துக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் சமூக ஊடகங்களில் இன்னொரு ஆணையின் நகல் பரவியது.

சுமத்ரா தீவில் பெரிய நிலநடுக்கம்: இலங்கையில் எச்சரிக்கை

இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாக்பாட் - சினிமா விமர்சனம்

கடந்த ஆண்டு வெளிவந்த குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாணின் அடுத்த படம் இது.

முந்தைய படத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள் என்பதால் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ஜாக்பாட்.

ரேவதியும் ஜோதிகாவும் சின்னச் சின்னத் திருட்டில் ஈடுபடுபவர்கள். ஒரு முறை சிறைக்குச் செல்லும்போது அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் ஒன்று இருப்பதும், அது தாதாவான ஆனந்த்ராஜ் வீட்டில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

உங்கள் நகரம் எந்த அளவுக்கு வெப்பமாக உள்ளது?

உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது. 2019 ஜூலை மாதம், வரலாற்றில் பதிவானதிலேயே அதிக வெப்பமான மாதமாக இருக்கும் - 1880 - 1900 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் பூமியெங்கும் ஜூலை மாத வெப்ப நிலை அதிகமாக உள்ளது என்று இந்த உலக உருண்டை காட்டுகிறது.

பருவநிலை மாற்றத்தின் மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு, புவி வெப்ப நிலை உயர்வு 1.5 டிகிரிக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொழில் புரட்சிக்கு அதாவது - 1850 - 1900 காலத்துக்கு - முந்தைய அளவைவிட 1.5 டிகிரி உயரக்கூடாது என்பது இதன் பொருள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :