மூன்றாக பிரிக்கப்படுகிறதா ஜம்மு & காஷ்மீர் மாநிலம்? - ஆளுநரை சந்தித்த ஒமர் அப்துல்லா

    • எழுதியவர், மஜித் ஜஹாங்கிர்
    • பதவி, பிபிசிக்காக, ஸ்ரீநகரில் இருந்து

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மத்திய காவல் படைகள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்ற இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பரவத் தொடங்கியதில் இருந்து காஷ்மீர் மக்களிடையே கடந்த சில நாட்களாக அச்ச உணர்வு நிலவுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை இன்று சந்தித்தார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், "மாநிலத்தில் சுற்றுலா பயணங்களுக்கு ஏன் திடீர் தடைவிதிக்கப்பட்டது குறித்து திங்கட்கிழமை அன்று, நாடாளுமன்றத்திலிருந்து ஒரு தெளிவான அறிக்கையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால், இந்நேரத்தில் பொதுமக்கள் அமைதி காக்குமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். இச்சூழலை நாம் அமைதியாக கையாள வேண்டியுள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, ரயில்வே ஊழியர்கள் நான்கு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை சேமிக்கத் தொடங்கிவிட்டதாகவும், ஒரு வாரத்துக்குத் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் சமூக ஊடகங்களில் இன்னொரு ஆணையின் நகல் பரவியது.

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி, நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.

மசூதிகளின் விவரங்களைக் கோரும் உள்துறை அமைச்சகத்தின் இன்னொரு ஆணையும் இணையத்தில் பரவியது. இது வழக்கமான நடவடிக்கை என்று காவல் துறை தெரிவித்தது.

பொது வெளியில் பரவும் இந்தத் தகவல்கள் பரவியது முதல் நன்றாகத் தூங்கக்கூட முடியவில்லை என்கிறார் ஸ்ரீநகரில் வசிக்கும் குலாம் ஹசன் ஹசன் பட். மரக்கட்டை செதுக்கி விற்கும் தொழில் செய்கிறார் இவர்.

"காஷ்மீருக்கான சில சட்டப்பிரிவுகள் மாற்றப்படும் என்கிறார்கள். எதற்காக இந்தக் கூடுதல் படைகள்? நாங்கள் நிம்மதி இழந்துள்ளோம். தொழிலும் நன்றாக நடக்கவில்லை . என் வீட்டில் ஒரு திருமண நிகழ்வு நடக்கவுள்ளது. இப்போது அதை நடத்தலாமா வேண்டாமா என்று யோசித்து வருகிறோம் ," என்கிறார் ஹசன் பட்.

இப்போது நிலவும் பதற்ற நிலையால் தமது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் ஹசன் பட்டின் மகன் ஹமாத் பட்.

பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அரசு கவிழ்ந்தபின், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 35-ஏ மற்றும் 370 ஆகியவற்றை நீக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்கிறார் ஹமாத் பட்.

"முதலில் இவை அனைத்தும் புரளி என்றுதான் நினைத்தோம். கூடுதல் படைகள் குவிக்கப்படுவதைப் பார்க்கும்போது எதுவோ நடக்கப்போகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது, " என்கிறார் அவர்களது உறவுக்காரப் பெண்மணியான ஹுமைரா ஃபிர்தோஸ்.

ஆனால், நிலைமை வழக்கமாகவே உள்ளது என்கிறார் ஜம்மு - காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மலிக்.

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து 2018இல் பாஜக விலகியபின் அங்கு ஆளுநர் ஆட்சி அமலானது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் பிடி அங்கு அதிகமாக உள்ளது.

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக பல பிரிவினைவாத தலைவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் காவல் படைகளால் நூற்றுக்கணக்கான ஆயுதப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாட்கள் காஷ்மீரில் தங்கி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் மெஹபூபா, "சட்டப்பிரிவு 35-ஏ மீது வைக்கப்படும் கைகள் எரிக்கப்படும்; கைகள் மட்டுமல்ல மொத்த உடலும் பற்றி எரியும்," என்று எச்சரித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :