பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா - உண்மை நிலவரம் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் இடங்களில் சுமார் 48 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தமுள்ள 479 கல்லூரிகளில் 2,24,344 இடங்கள் இருக்கின்றன.

இவற்றில் இருந்து 1,72,940 இடங்கள் அரசின் ஒற்றைச் சாளர முறையின் கீழ் நிரப்பப்படுகின்றன. இதில் தனியார் கல்லூரிகளிலிருந்து மட்டும் 1,51,574 இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் வருகின்றன.

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. சேர்க்கைக்கான கலந்தாலோசனை ஜூன் 25ம் தேதி துவங்கியது.

ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பொறியியல் இடங்கள் இருந்த நிலையில், சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மாணவர்களே பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர்.

முதல் நான்கு சுற்றுக் கலந்தாய்வுகள் ஆன்லைனில் நடைபெற்றன. அந்த நான்கு சுற்றுக் கலந்தாய்வுகள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள் என ஒட்டுமொத்தமாக 78,047 இடங்கள் நிரம்பின.

ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னையில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றன. இதற்காக 6,000 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கற்றனர். இந்த சிறப்புக் கலந்தாய்வின் முடிவில் ஒட்டுமொத்தமாக 83,396 மாணவர்கள் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 72 ஆயிரத்து 600 மாணவர்களே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 11,300 அதிக மாணவர்கள் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மொத்தமுள்ள இடங்களில் 46.44 சதவீத இடங்களே நிரம்பின. ஆனால், இந்த ஆண்டு சுமார் 48 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 52 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன.

சிறப்புக் கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தாலும், கலந்தாய்வு நிறைவுபெற புதன்கிழமை அதிகாலை ஆகிவிட்டது. சுமார் 800 மாணவர்கள் இறுதி நாள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டுகளில் பல பொறியியல் கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர்கூட சேராத நிலை இருந்துவந்தது. இதனால், பல பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு, பல பாடப்பிரிவுகளுக்கு அனுமதிகோரி விண்ணப்பிக்கவேயில்லை. இதனால், சுமார் 5,000 இடங்கள் இந்த ஆண்டு குறைந்தன.

அதேபோல, கடந்த சில ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு ஆர்வம் குறைந்ததால், அதிலிருந்த இடங்களை தனியார் பொறியல் கல்லூரிகள் அரசிடம் திருப்பித் தந்துவிட்டு, மெக்கானிகல் பிரிவுகளில் இடங்களை அதிகரித்துவந்தன.

ஆனால், இந்த ஆண்டு மீண்டும் கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம், இசிஇ படிப்புகளுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சிவில், மெக்கானிகல் போன்ற அடிப்படை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை மந்தமாகியிருக்கிறது.

"கம்யூட்டர் சயின்சில் பொறியியல் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் தற்போது வெகுவாக அதிகரித்திருக்கின்றன. அதனால், மீண்டும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது," என்கிறார் கல்வியியல் ஆலோசகரான ஜெயபிரகாஷ் காந்தி.

"எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. சமீபத்தில் ஒரு சர்வதேச நிறுவனம் 4,000 பொறியாளர்களைத் தேர்வுசெய்வதற்காக இங்கே வந்தது. ஆனால், சரியான ஆட்கள் கிடைக்கவில்லை. அப்படித்தான் இருக்கிறது நிலைமை. மாணவர்கள் கல்லூரியில் படிப்பது மட்டுமல்லாமல், தாங்களாகவும் படித்து தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார் அவர்.

ஆனால், இதுவரை எந்தப் பாடப் பிரிவுகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற புள்ளிவிவரம் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவந்தது. அதனால், பல கல்லூரிகளில் போதுமான மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாத நிலை தொடர்ந்து நீடித்துவருகிறது.

இதனால், கடந்த ஆண்டே பல பொறியியல் கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகள் மூடப்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணிகளை இழந்தனர். ஆனால், இந்த ஆண்டு நிலைமை மேம்பட்டிருக்கிறது.

2018ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 509 கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 479ஆகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் அரசின் ஒற்றைச் சாளர முறையின் கீழ் 1,77,117 இடங்கள் நிரப்பப்படுவதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த வருடம் அந்த எண்ணிக்கை 1,72,940ஆக குறைந்திருந்தது.

அதேபோல, கடந்த ஆண்டில் 77,094 மாணவர்களே சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 83,396 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. கடந்த ஆண்டில் 1,00,023 இடங்கள் காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 89,544 இடங்கள் காலியாக இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :