வி.ஜி.சித்தார்த்தா: இந்தியாவில் காஃபி கஃபே ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராஜா

    • எழுதியவர், சமீர் ஹஷ்மி
    • பதவி, வணிகச் செய்தியாளர், பிபிசி

காஃபி டே நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளருமான வி.ஜி. சித்தார்த்தாவின் மரணம் இந்தியாவில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மங்களூர் நகருக்கு வெளியே ஆற்றின் ஓரத்தில் புதன்கிழமை அதிகாலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆடம்பரமற்ற தொழிலதிபர்

இந்தியாவில் மிகப் பெரிய காஃபி சங்கிலித் தொடர் நிறுவனத்தை நடத்தி வந்த போதிலும், சித்தார்த்தா, ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாவிட்டாலும், அவர் உருவாக்கிய பிராண்ட் இந்தியாவின் பொருளாதார அந்தஸ்தை வெளியுலகில் உயர்த்துவதன் அடையாளமாக இருந்தது.

கர்நாடகாவில் பசுமையான மலைப் பகுதியாக உள்ள சிக்மகளூரில் காஃபி எஸ்டேட் உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தவர் சித்தார்தா. 1980களில் முதலீட்டு வங்கியாளராக தனது தொழிலை அவர் தொடங்கினார். பங்குச் சந்தைகளில் அவர் முதலீடு செய்யத் தொடங்கினார்.

இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட போது காஃபி வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், 1991க்குப் பிறகு அவருக்கு முதலாவது திருப்பம் ஏற்பட்டது. இதனால் 1993ல் அவர் காஃபிக் கொட்டை வியாபாரம் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இருந்து காஃபி ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அவருடைய நிறுவனம் உயர்ந்தது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள காஃபி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் இந்தியாவில் காஃபி சங்கிலித் தொடர் நிறுவனங்களைத் தொடங்கும் சிந்தனையை செயல்படுத்தினார். ஆரம்பத்தில் அவருடைய சகாக்கள் அவருடைய ஊக்கத்தைக் குறைத்தனர். டீ அதிகம் குடிப்பவர்களைக் கொண்ட நாட்டில் காஃ பியை அடிப்படையாகக் கொண்ட வியாபாரம் எடுபடாமல் போய்விடும் என்று அவர்கள் நினைத்தனர்.

ஆனால் சித்தார்த்தா தனது திட்டத்தை கைவிட்டுவிடவில்லை. பிறகு ஜெர்மனியில் சங்கிலித் தொடர் காஃபி நிறுவனமான ட்ச்சிபோவின் உரிமையாளர்களுடன் ஆலோசித்தபோது, அவரது திட்டத்தை செயல்படுத்துமாறு அவர்கள் ஊக்கம் கொடுத்தனர்.

காஃபி ராஜாவின் வளர்ச்சி

1996ஆம் ஆண்டில் தன்னுடைய முதலாவது கஃபே காஃபி டே விற்பனை நிலையத்தை பெங்களூரில் வளர்ச்சியடைந்த ஒரு பகுதியில் அவர் தொடங்கினார். ``ஒரு கப் காஃபி சாப்பிடும் போது நிறைய விஷயங்கள் நடக்கலாம்' என்ற வாசகத்துடன் அவர் தொழிலைத் தொடங்கினார்.

இளவயதினரிடம் அது உடனடியாக வரவேற்பைப் பெற்றது. மாணவர்களும், 30 வயதுக்கு உள்பட்ட கார்ப்பரேட் அலுவலர்களும் அவருடைய காஃபி விற்பனை நிலையத்தில் குவிந்தனர், காஃபி குடித்து பல மணி நேரத்தை அங்கு செலவிட்டனர்.

1990களின் இறுதியிலும், 2000வது ஆண்டுகளின் தொடக்கத்திலும் அவருடைய நிறுவனத்தின் நற்பெயர் வேகமாக வளர்ந்தது. கஃபே காஃபி டே நிறுவனம் முதலாவது சர்வதேச விற்பனை நிலையத்தை 2005ல் வியன்னாவில் தொடங்கியது. 2011க்குள் 1000க்கும் மற்பட்ட சர்வதேச விற்பனை நிலையங்களைத் தொடங்கிவிட்டது.

பெங்களூருவைச் சேர்ந்த பிராண்ட் ஆலோசகரான ஹரிஷ் பிஜூர் இதுபற்றிக் கூறும்போது, இந்தியாவின் `ஹோவர்டு சூல்ட்ஸ்' என்று சித்தார்த்தாவை வர்ணித்தார்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் அதிக காலம் பணியாற்றிய அதன் முன்னாள் தலைமை நிர்வாகியான சூல்ட்ஸ், அமெரிக்காவை சேர்ந்த காஃ பி நிறுவனத்தை அடையாளத்துவமிக்க சர்வதேச பிராண்ட் ஆக மாற்றியதில் முக்கிய நபராக இருந்தார்.

``இந்தியாவில் காஃபி கலாச்சாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார் சித்தார்த்தா. கேள்விக்கு இடமில்லாமல் அவர் தான் காஃபியின் ராஜா,'' என்று பிபிசியிடம் பிஜூர் கூறினார்.

கஃபே காஃபி டேவின் வணிக மாதிரி மூன்று கோட்பாடுகளின் கட்டுப்படியாகும் விலை, நல்ல சூழல் மற்றும் தரமான சேவை அடிப்படையில் அமைந்திருந்தது .

பன்முக வாடிக்கையாளர் குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து சமயங்களிலும் புதிய வகைகளையும் சேவைகளையும் சித்தார்த்தா அறிமுகம் செய்து கொண்டே இருந்தார். குறிப்பாக காஃபிக்காக 1 - 1.5 டாலருக்கும் அதிகமாக செலவு செய்யாத இளைஞர்களை நோக்கியதாக கஃபே காஃபி டே விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில் கூடுதல் சேவைகளுக்கு அதிகம் செலவழிக்கத் தயங்காத, வசதிபடைத்த வாடிக்கையாளர்களுக்காக சில வளாகங்கள், விற்பனை நிலையங்களையும் அவர் திறந்தார்.

அங்கு மெனுவில் உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. இன்டர்நெட் அபூர்வமாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் அங்கு இலவசமாக இணையதள சேவை அளிக்கப்பட்டது.

`அந்தக் காலக்கட்டத்தில் காஃ பியும் இணையதள வசதியும் அருமையான கலவையாக இருந்தது' என்கிறார் பிஜூர்.

சில விற்பனை நிலையங்களில் இசை அரங்குகளும் அமைக்கப் பட்டிருந்தன. அங்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுக்குப் பிடித்தமான பாடலை இசைக்கச் செய்து காஃபி அருந்திக் கொண்டே அதை ரசிக்கலாம். அந்த காலக்கட்டத்தில் அது புதுமையான சிந்தனையாக இருந்தது.

இப்போது அந்த நிறுவனத்துக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் 1700க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன. பராகுவே, வியன்னா, கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் இதன் கிளைகள் உள்ளன.

கடும் போட்டியும் நிதி நெருக்கடியும்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பெரிய போட்டி ஏதும் இல்லாமல் தொழில் நடந்து வந்த நிலையில், ஸ்டார்பக்ஸ், கோஸ்டா காஃபி போன்ற சர்வதேச நிறுவனங்கள் 2012ல் வந்த பிறகு கஃபே காஃபி டே நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் - கடும் போட்டி காரணமாக தன்னுடைய விரிவாக்கப் பணிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிக நிதி திரட்டுவதற்காக 2015 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு தனது நிறுவனத்தை மக்கள் முதலீடு செய்யும் நிறுவனமாக மாற்றினார். ஆனால் அதற்கு முதலீட்டாளர்களிடம் உற்சாகமான வரவேற்பு கிடைக்கவில்லை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் பங்குகளின் விலை 18 சதவீதம் சரிவைக் கண்டது.

கஃபே காஃபி டே நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் ஜே.எல்.எல். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு சுப்ரன்ஷு பானி, தனது சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக,லாபம் வராத விற்பனை நிலையங்களை இந்த நிறுவனம் மூடத் தொடங்கியது என்று தெரிவிக்கிறார்.

`போட்டியை சமாளிக்க தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் உணர்ந்தார்கள்'' என்று பிபிசியிடம் பானி கூறினார்.

இந்த நடவடிக்கையால் கஃபே காஃபி டே நிறுவனத்துக்கு அதிக பணம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று நிதியாண்டுகளாக இந்த நிறுவனம் தொடர்ச்சியாக லாபம் ஈட்டியது.

லாபம் ஈட்டும் நிலை அதிகரித்துள்ள நிலையிலும் வளர்ச்சிக்குத் தடங்கலாக அதிகரிக்கும் கடன் இருந்தது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் சுமார் 1 பில்லியன் டாலர்களை எட்டும் நிலையில் இருந்தது. நிறுவனத்தின் கடன்களைக் குறைப்பதற்கு மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் தனது முதலீட்டில் 20.41 சதவீதத்தை சித்தார்த்தா விற்பனை செய்தார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அந்த நிறுவனத்தின் பங்குகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்றதில் 450 மில்லியன் டாலர் கிடைத்தது. கஃ பே காஃ பி டே நிறுவனத்தின் கடன்களைக் குறைக்க, அதில் ஒரு பகுதி பங்குகளை விற்பதற்கு கொகோ கோலா போன்ற பல முதலீட்டாளர்களுடன் சித்தார்த்தா பேச்சு நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் இந்தத் தகவல்களை கொகோ கோலா நிறுவனம் ஒருபோதும் உறுதி செய்யவில்லை.

ஆனால் கடன்கள் அதிகரித்ததால், சந்தையில் நிறுவனத்தின் மதிப்பும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

2018 ஜனவரியில் கஃ பே காஃ பி டே பங்கு விலை அதிக பட்ச அளவாக சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. அதன்பிறகு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு சரிந்துவிட்டது. உண்மையில் - செவ்வாய்க்கிழமையில் இருந்து - சித்தார்த்தா காணாமல் போய்விட்டார் என்ற தகவல் முதலில் வெளியானதில் இருந்து, இதன் பங்குகளின் விலை 35 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துவிட்டது.

சவால்கள் இருந்தாலும், கஃ பே காஃ பி டே என்பது சக்திமிக்க பிராண்ட், சரியாக நிர்வகித்தால் அதற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சித்தார்த்தாவின் திடீர் மரணம் பெரிய கேள்விக் குறியை விட்டுச் சென்றிருக்கிறது. தனது இருண்ட காலத்தில் இருந்து மீண்டு மறுபடியும் இந்த நிறுவனம் உயிர்த்தெழுமா என்பதுதான் அது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :