You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டார்' - அமெரிக்கா அறிவிப்பு மற்றும் பிற செய்திகள்
அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.
செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கய்தா கூறுகிறது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
அதாவது, சுமார் 30 வயதானவராக கருதப்படும் ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலி மற்றும் காணொளியை வெளியிட்ட பிறகே அமெரிக்கா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.
இதுகுறித்த தகவல்களை என்.பி.சி மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய ஊடகங்களில் முதலாவதாக வெளியிட்டன.
கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க துபாய் இளவரசி கோரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார்.
இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது
சர்வதேச கபடி தொடரில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை
கபடி விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் தமிழக கபடி வீராங்கனை குருசுந்தரி அண்மையில் ஒரு சர்வதேச அளவிலான கபடித் தொடரில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார்.
கடந்த வாரம் மலேசியாவில் நடந்த பெண்களுக்கான உலக அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்றவுடன் 27 வயதான தமிழக வீராங்கனை குருசுந்தரி எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தில் இந்திய கொடியுடன் தோன்றுகிறார்.
தான் விளையாடிய சர்வதேச தொடரில் வென்ற பதக்கம் அணிந்து தோன்றும் படங்களில் வெற்றிச்சிரிப்பில் மிளிர்கிறார் இந்த மதுரை மங்கை.
இந்தியாவின் மிகச்சிறந்த புலிகள் காப்பகத்தின் சாதனைகளும் சவால்களும்
ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமான தமிழகத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், இந்தியாவில் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட வரும் புலிகள் காப்பகத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1411.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள, தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இங்கு 60 புலிகள் வாழ்வதோடு, 111 சிறுத்தைகள், 800 யானைகள் வாழ்வதாக அண்மையில் வெளியான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புலிகள் காப்பகங்களின் மேலாண்மை குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
தமிழக அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு
மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2007ல் தொடங்கப்பட்டாலும், 2011ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ல் மேம்படுத்திய பின்னர், ரூ.70 மாத சந்தாவில் 100 சேனல்களை அரச கேபிள் டிவி சேவையை மக்கள் பெற்றுவந்தனர். அந்த மாத சந்தா படிப்படியாக ரூ.206 வரை உயர்ந்த நிலையில், இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிவந்தனர்.
விரிவாக படிக்க:தமிழக அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்