You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குருசுந்தரி: சர்வதேச கபடி தொடரில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கபடி விளையாட்டில் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் தமிழக கபடி வீராங்கனை குருசுந்தரி அண்மையில் ஒரு சர்வதேச அளவிலான கபடித் தொடரில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார்.
கடந்த வாரம் மலேசியாவில் நடந்த பெண்களுக்கான உலக அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்றவுடன் 27 வயதான தமிழக வீராங்கனை குருசுந்தரி எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தில் இந்திய கொடியுடன் தோன்றுகிறார்.
தான் விளையாடிய சர்வதேச தொடரில் வென்ற பதக்கம் அணிந்து தோன்றும் படங்களில் வெற்றிச்சிரிப்பில் மிளிர்கிறார் இந்த மதுரை மங்கை.
எம்.பில் (தமிழ்) முடித்து, தமிழக வனத்துறையில் பயிற்சிக் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார் குருசுந்தரி.
அண்மையில் நடந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழரான குருசுந்தரி, பல சவால்களுக்கு இடையில் தொடர்ந்து கபடி விளையாட்டில் கவனம் செலுத்தியவர்.
இந்திய அளவில் நடந்த போட்டிகளில் நான்கு முறை தமிழக அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். நிறைய கோப்பைகளும், பதக்கங்களும் காணக்கிடைக்கும் குருசுந்தரியின் இல்லத்தில் அவரை ஊக்கப்படுத்தும் பெற்றோர் விளையாட்டை பெரிதும் மதிக்கின்றனர்.
''கபடி போட்டி பெரும்பாலும் ஆண்களுக்கான விளையாட்டாக பார்க்கப்படுகிறது. விளையாட்டுத்துறையில் தடகள போட்டிகளை தாண்டி, கபடி போன்ற குழு போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளது. ஆனால் என் விருப்பத்தை அறிந்த பெற்றோர் - சுப்புலட்சுமி, கோபால்சாமி என்னை ஊக்குவித்தார்கள்'' என்று குருசுந்தரி நினைவுகூர்ந்தார்.
''முதலில் மூன்று ஆண்டுகள் கபடி விளையாட ஷார்ட்ஸ் அணிவதற்குக் கூச்சப்பட்டேன். ஆனால் தொடர்ந்து வந்த வெற்றிகளை பார்த்த பெற்றோர் எனக்கு தைரியமூட்டினர். என்னுடைய பள்ளி, கல்லூரி குழுவினர், பயிற்சியாளர்கள் தந்த உற்சாகம் தற்போது இந்திய அணியில் என்னை இடம்பெறச் செய்துள்ளது,''என்கிறார் குருசுந்தரி.
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தைவான் என பல நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி தனித்துவம் பெற்ற குழுவாக இருந்தது என்கிறார் குருசுந்தரி.
''மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள கபடி வீரர்கள் தேர்ந்தவர்களாக உள்ளனர். நாங்கள் இறுதிப்போட்டியில் தைவான் நாட்டோடு விளையாடினோம் . முதல் சுற்று மட்டும் சற்று கடினமாக இருந்தது. ஆனால் அடுத்த சுற்றில் எளிமையாக அவர்களை கையாண்டு வெற்றிபெற்றோம். உலகளவில் கபடி போட்டியில் பெண்கள் அணியினர் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டோம்,'' என்கிறார் அவர்.
தமிழகத்தில் பல இடங்களில் கபடி விளையாட மண் தரை மட்டும் உள்ளது என்றும் சர்வதேச போட்டிகளில் மேட்கிரௌண்ட்டில் ஷூ அணிந்துதான் விளையாடவேண்டும் என்பதால் சிக்கல் இருப்பதாக கூறுகிறார் குருசுந்தரி.
''மண் தரையில் விளையாடுவதற்கும், மேட் கிரௌண்டில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. கபடி விளையாட்டு போதிய கவனம் பெறவில்லை என்றே தோன்றுகிறது. தற்போது நான் வேலைசெய்யும் வனத்துறையில் பெண்கள் அணியை தொடங்க அதிகாரிகள் ஆர்வமூட்டியுள்ளனர். தொடர் பயிற்சி, அடிப்படை வசதிகள் இருந்தால், மேலும் பதக்கங்களை குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது,''என்கிறார் அவர்.
வடஇந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைசெய்யும் பல பெண்கள் தொடர்ந்து கபடி விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்று குறிப்பிடும் குருசுந்தரி, ''தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்ததும் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பது குறைவாக உள்ளது. வட இந்தியாவில் அதிலும் ஹரியானாவில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். விளையாடினால், நாம் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, அரசு, தனியார் துறைகளில் வேலை கிடைக்கும் என்ற விழிப்புணர்வு கல்லூரி அளவில் தேவை,''என்றார்.
மேலும் கிரிக்கெட் விளையாட்டைப் போல தனியார் நிறுவனங்கள் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் போட்டிகள் நடத்தினால் பல பெண் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், அவர்களின் குடும்பத்தினரும் அவர்களின் திறமையை உணர்ந்துகொள்வார்கள் என்கிறார் குருசுந்தரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்