You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே இருக்கிறார்"
சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் படுகாயமடைந்த உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் என்பவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றம் சாட்டிய பெண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சென்ற கார், சில தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே பதிவெண் அழிக்கப்பட்ட லாரி மோதியது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த வழக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண் இன்னும் மயக்க நிலையிலிருந்து எழவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பை சேர்ந்த வழக்கறிஞர், அவரது உடல்நிலை தேறும் வரை லக்னோ மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்புவதாக தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தெரிவித்தார்.
அதே போன்று, வேறொரு வழக்கின் கீழ் உத்தரப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் மகேஷ் சிங்கை டெல்லியுள்ள திகார் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்னும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக இன்று அம்மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முதல் முறையாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுவது, வாகனம் மோதிய சம்பவத்தை சிபிஐ ஒரே வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது, இழப்பீடு கொடுப்பது, டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் 45 நாட்களில் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கை விசாரித்து முடிப்பது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
வழக்கின் பின்னணி
உன்னாவ் சட்ட மன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நடவடிக்கை கோரி அந்தப் பெண் உ.பி. முதல்வர் யோகி ஆதித்திய நாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
அதற்கு மறுநாள் போலீஸ் காவலில் இருந்த அவரது தந்தை இறந்தார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பி அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து எம்.எல்.ஏ. சேங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் அவரது உறவினர் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.
முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆகஸ்டு 1ஆம் தேதி சேங்கர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்