You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் தொழிலாளியைத் தேடி மகளுக்காக சென்ற தந்தை - பேரன்பு படம் குறித்து பெண்கள் கூறுவதென்ன?
- எழுதியவர், அகிலா இளஞ்செழியன்
- பதவி, பிபிசிக்காக
ஓர் அப்பாவுக்கும், Spastic Cerebral Palsy எனப்படும் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைக்கும் இடையிலான உறவினை பேசிய படமாக வெளிவந்துள்ள பேரன்பு திரைப்படம் குறித்து பெண்களிடம் பேசினோம்.
பொதுவாக எந்த திரைப்படம் வெளியானாலும், அது பெண் மைய திரைப்படமாக இருந்தாலும் ஆண்களிடம் இருந்தே அதிகமாக திரை விமர்சனங்கள் வருகின்றன. மாற்றுத் திறனாளியான பெண் குழந்தையை மையமாக வைத்து சுழலும் இக்கதையைப் பற்றி பெண்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அறிய முனைந்தோம்.
எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்
ஒரு சினிமா ரசிகையாக பேரன்பு எனக்கு பிடித்திருக்கிறது. அதையும் தாண்டி பெண்ணியலாளராக இந்தப் படத்தினை அவசியமான ஒன்றாகப் பார்க்கிறேன். பெண்களின் பாலியல் தேவையை வெளிப்படையாக பேசுவதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை.
பெண்களை புனிதப்படுத்துவதன் பேரில் மீண்டும் மீண்டும் அவளை சமூகம் ஒடுக்கித்தான் வைத்து இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள இந்தியாவில் பெண்களின் உணர்ச்சிகள் அதிகமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிக்கு பாலியல் ஆசை வரும் என்பதை பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஆனால், பிறந்த குழந்தையை மிக கவனமாக கையாளுவதைப் போல அழகாகவும், நேர்த்தியாகவும் இந்தக் கருத்தினை பேரன்பு கையாண்டிருக்கிறது. மேலும் , பெண்ணியம் என்பதை பெண்களுக்கு உரியதாக மட்டும் பார்க்கிறோம். ஆனால், திருநங்கைகளுக்கும் அது பொருந்தும் என்பதை பார்க்க மறுக்கிறோம். பேரன்பு திருநங்கைகளை கேலிக்கு உரியவர்களாக காட்சிப்படுத்துவதை தவிர்த்து, அவர்களுக்கான அங்கீகாரத்தையும் வழங்கி இருக்கிறது. பேரன்பு ஒரு மிகச் சிறந்த தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்கிறார்.
எழுத்தாளர் பிரியா தம்பி
மூளை முடக்குவாத நோயால் (Spastic Cerebral Palsy) பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பிரச்சனையை பாலியல் தேவை என்று சித்தரித்துள்ளது இப்படம், இந்தக் காட்சிகளால், பெண் குழந்தையின் மீது பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இது போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு இருக்கின்றது.
அதிலும் படத்தில் வரும் பாப்பா என்ற கதாபாத்திரம் பதின் பருவ சிறுமி, அவளுக்கு காம உணர்வு வருகிறது என்பதற்காக அப்பா, ஆண் பாலியல் தொழிலாளியிடம் போய் நிற்பதை நியாயப்படுத்துவது பெரும் தவறு. தன் குழந்தையின் பாலியல் தேவையை ஒரு ஆண் பாலியல் தொழிலாளியைக் கொண்டு பூர்த்தி செய்யலாம் என்ற காட்சியில் எப்படி பேரன்பை உணர முடிகின்றது எனத் தெரியவில்லை.
அப்பா கதாபாத்திரத்தின் மீது கருணை வரவேண்டும் என்பதற்காக காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அமுதவனையும் பாப்பாவையும் காண்பிக்கும் காட்சிகள் அப்பாவுக்கும் , மகளுக்குமான காட்சிகளாக இல்லை, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காட்சிகளாகத்தான் இருக்கின்றன.
அதனால்தான் அப்பா , மாற்றுத்திறனாளி குழந்தைக்கு நாப்கின் மாற்றிவிடும் காட்சி, ஒரு ஆண், பெண்ணுக்கு நாப்கின் மாற்றி விடுகிறானே என்று சிலாகிக்கப்படுகின்றது. சிறப்புக் குழந்தைகள் எப்படி எல்லாம் வெற்றி பெற்றார்கள் என்று காட்சிப்படுத்தி இருந்தால், அந்தக் குழந்தைகளை வைத்து இருக்கும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை தரும் படமாக இது அமைந்து இருக்கும், மாறாக சிறப்புக் குழந்தைகளை வைத்து இருக்கும் பெற்றோருக்கு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும் படமாகவே இது உள்ளது.
அந்தக் குழந்தைகளை பரிதாபமாக பார்க்க தூண்டும் படமாகவும் , அவர்களுக்கு அதீத பாலியல் உணர்வு இருக்கும் என்ற ஆபத்தான செய்தியை சொல்லும் படமாகவும் மட்டுமே இது அமைந்து இருக்கின்றது என்கிறார்.
பிண்ணனிக் குரல் கலைஞர் ரஞ்சிதா
ஒரு பதின் பருவ மகள் இருக்கிறாள், அவளுக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை. ஆனால் அவள் தனிமையில் தன் உடல் குறித்து குழப்பமடைகிறாள் என்றால் என்ன செய்ய வேண்டும். அருகில் அமர்ந்து நட்புடன் பேச வேண்டுமா அல்லது பாலியல் தொழிலாளியினை தேடிப்போவது சரியாகுமா. குறைபாடுள்ள குழந்தை என்பதால் பாலியல் தொழிலாளியிடம்தான் செல்ல வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்.
கலவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு அவள் அனுமதியில்லாமல், அறிமுகமில்லாத ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள சொல்லலாம் என முடிவெடுப்பது மிகப்பெரிய வன்முறை. பாலியல் இன்பம், கட்டிலின் சப்தத்தில் வருவதல்ல பெண்களுக்கு.
தனக்கு பிடித்த ஆணின் தழுவலில், தொடுதலில், அவனது அணைப்பில் அவளுக்கான திருப்தியும், அன்பும் உள்ளதென்பதை எந்தவொரு காலகட்டத்திலும் புரிந்து கொள்ளப்போவதில்லை இந்த சமூகம். ஒரு பெண்ணின் மன, உடல் தேவைகளை மற்றவர்கள் முடிவு செய்யக் கூடாது. அவளுக்கான தேவையும் தேடலும் அவள் முன் பரந்து விரிந்து உள்ளது.
"அதை அவளால் தேர்ந்தெடுக்க இயலும் எந்த நிலையிலும், இந்தப் படம் பேச நினைத்த கருத்து சரியாக இருக்கலாம். ஆனால், அதனை காட்சிப்படுத்திய விதத்தில் நிறைய அபத்தங்கள் இருக்கின்றன," என்று தெரிவித்தார்.
எழில், மனநல ஆலோசகர்
உளவியல் ரீதியாக இத்திரைப்படத்தில் நிறைய தவறுகள் இருக்கின்றன. பேரன்பு, கொண்டாடப்பட வேண்டிய திரைப்படமும் அல்ல, பார்க்கவே கூடாது என்று புறக்கணிக்கவும் வேண்டியதில்லை. சராசரியாக இருக்கும் மற்ற பெண்கள் தனது பாலியல் தேவைகளை சரி செய்து கொள்ள முடியும், இந்தப் பெண்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இப்படத்தில், பதின் பருவத்தில் இருக்கும் மற்ற பெண்கள் மட்டும் ஆண்களையோ, பாலியல் தொழிலாளியையோ தேடிப் போய் விடுகிறார்களா.
உடலுறவு வைத்துக் கொள்ள உடல் தயாராகும் வரை, சரியான வயது வரும் வரை பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தவும், வேறு செயல்களில் கவனத்தை செலுத்தவும் வழிகாட்டுதல் தான் சரியானதாக இருக்கும். இதே வழிமுறைகளைத்தான் சிறப்புக் குழந்தைகளிடமும் பின்பற்ற வேண்டுமே தவிர இந்தப் படம் காண்பித்திருக்கும் முடிவு மிக மிகத் தவறானது.
இது எவ்வளவு பிரச்சனை தெரியுமா, இதை கவனிக்கா விட்டால் என்ன ஆகும் தெரியுமா என்ற பயமுறுத்தும் தொணியில் அமைந்துள்ள காட்சிகள், இது போன்ற சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு எவ்வளவு பதற்றத்தை ஏற்படுத்தும். அப்பா, தனது மகளை பராமரிக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்த முயற்சித்தது சரியானது என்றாலும், அறிவியலை, சிறுமியின் உணர்வுகளை காட்சிப்படுத்தி உள்ள விதம் தவறானது.
புனிதா, ஐ.டி ஊழியர்
திரைப்பட ஆர்வலரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிபவருமான புனிதாவிடம் கேட்ட போது, இதே போல செரிபரல் பால்சி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றிய திரைப்படம் தான் "Margaritta with a straw." அந்தப்படம் அந்தப் பெண்ணை சுயமாக சிந்திக்கின்ற கம்பீரமான பெண்ணாக காட்டி இருந்தது.
இந்தப் படம் சிறப்பு குழந்தையாக இருக்கும் பாப்பா என்கிற கதாபாத்திரத்தை அனுதாபத்திற்குரியதாக, சுயமற்றவளாக காட்டி இருக்கின்றது. அமுதவன் என்கிற ஆண் கதாபாத்திரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக பெண்களை தாழ்த்திக் காண்பிப்பது ஆணாதிக்க சிந்தனையின் அடையாளம்தான் என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :