You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு - சி.ஆர்.பி.எப் படையினர் 40 பேர் பலி
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி, ஸ்ரீநகர்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் குறைந்த 40 பேர் கொல்லப்பட்டுள்ளதை பிபிசியிடம் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதில் குறைந்தது 44 பேர் காயமடைந்துள்ளனர்.
31 பேர் கொல்லப்பட்ட, ஜம்மு அருகே கலூசாக் ராணுவ தளம் மீது 2002இல் நடத்தப்பட்ட தாக்குதலே இந்தியப் பாதுகாப்பது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது.
1989இல் 10 தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவே கார் மூலம் நிகழ்த்தப்படும் இரண்டாவது தாக்குதல் ஆகும்.
இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கிய 1989க்கு பிறகு, இந்தியப் படைகள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல் இதுவாகும்.
லேத்போரா எனும் இடத்துக்கு அருகில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வாகனங்கள் சென்றபோது அங்கு ஐ.ஈ.டி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
70 பேருந்துகளில் சுமார் 2,500 ரிசர்வ் காவல் படையினர் சென்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யயப்பட்ட ஜெய்ஷ்-இ-மொஹமத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் ரிசர்வ் போலீஸ் வாகனங்கள் மீது மோதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆதில் அகமது என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி தெரிவிக்கிறது. வழக்கமாக சுமார் 1,000 பேர் மட்டுமே செல்வார்கள்.
300 மைல் நீளமுள்ள அந்த நெடுஞ்சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிரங்களின்படி, இந்த ஆண்டில் கடந்த ஆறு வாரங்களில் 20 தீவிரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு குறைந்தது 250 தீவிரவாதிகள், 84 காவல் படையினர் மற்றும் சுமார் 150 பொதுமக்கள் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த மோசமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வீரம் நிறைந்த தியாகிகள் குடும்பத்துடன், தேசம் தோளோடு தோள் சேர்த்து நிற்கிறது என்று அப்பதிவில் கூறியுள்ளார்.
ஜெய்ஷ்-இ-மொஹமத் அமைப்பு
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு செப்டம்பர் 2016இல் யூரி ராணுவத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்க ஆகிய நாடுகளின் அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்