You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரணில் விக்கிரமசிங்க: 'வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளை நாங்கள் அறிவோம்' - ரணில்
இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது யாழில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.
இதற்கமைய கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டடத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்திருந்தார்.
கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"வடக்கிற்கு பல தடவைகள் வருகை தந்துள்ளேன். இங்குள்ள பலருடனும் நல்ல உறவு எனக்கு இருக்கிறது. கதிரவேலுப்பிள்ளை முதல் தர்மலிங்கம் என பலருடன் கோப்பாய் பிரதேசத்திற்கும் வந்திருக்கின்றேன்."
"தற்போது தர்மலிங்கத்தின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் இந்த இடத்தில் இருக்கின்றார். இவ்வாறு இங்கு வந்து கட்டிடத்தை திறந்து வைப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது."
"வடக்கு மாகாணம் முழுவதும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதே நேரம் இந்த அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நாங்கள் வடபகுதிக்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றோம்."
"இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை நாங்கள் அறிவோம். இந்த விடயங்கள் தொடர்பில் இங்குள்ள உங்களது பிரதிநிதிகள் அடிக்கடி எங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றனர். ஆகவே தான் அவற்றை தீர்த்து வைப்பதற்காக பல அமைச்சர்களை அழைத்து வந்திருக்கின்றேன்."
"ஆகையினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வைக்காண முடியுமென்று எதிர்பார்க்கின்றோம். இந்த அரசாங்கத்தை பொறுத்தவரையில் தானாக எதனையும் இங்கு செய்யவில்லை. இங்குள்ள உங்களது பிரதிநிதிகளுடன் கலந்து பேசியே இங்கு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது."
"இவ்வாறு நாம் செய்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் இந்த அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றது."
"ஆகவேதான் வடக்கு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் நாங்கள் செயலாற்றுகிறோம்," எனக் கூறிக் கொள்கிறோம் என்று ரணில் பேசினார்.
இதேவேளை இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “நீண்ட காலமாகவுள்ள தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வை காண்பதன் மூலமே இந்த நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
ஆனால் தீர்வுதான் வரவில்லை. ஆகவே தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கோருவதாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக் கூடியதான அத்தகையதொரு தீர்விற்கு ஐனாதிபதி,பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் உதவ வேண்டுமெனக் கேட்கின்றோம்.
குறிப்பாக, பிரதமரும் அவரது கட்சியான ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்.
பிற செய்திகள்:
- 'சாதி மதம் அற்றவர்' என சான்றிதழ் பெறுவது எப்படி? - ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர்
- யார் இந்த மதுபாலா? இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது?
- காதலால் கசிந்துருகி வாழ்ந்த காலங்கள் கடந்துவிட்டதா?
- நரேந்திர மோதியை ராகுலும், பிரியங்காவும் புகழ்ந்து பேசினார்களா? #BBCFactCheck
- இசைக்குறிப்பாக, பட்டாம்பூச்சியாக கடந்து சென்ற காதலிகளுக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்