You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி இலங்கை முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்
இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பல்வேறு தரப்பினர், பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், இந்த அடிப்படை சம்பள பிரச்சனைக்கான தீர்வு இன்று வரை தீர்க்கப்படாத நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு கோரப்பட்ட போதிலும், 700 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான உடன்படிக்கையில், தொழிற்சங்கங்கள் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன.
எனினும், இந்த உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படாது, இடை நிறுத்தப்பட்டு, அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புதுவிதமான போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்த மக்களின் பிரச்சனையை நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், நாடு முழுவதும் சைக்கிளில் சென்று மக்களை தெளிவூட்ட தர்மலிங்கம் தீர்மானித்தார்.
வவுனியா - கோயில்குளம் சிவன் கோவிலில் இன்று காலை நடாத்தப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, பெருந்தோட்ட மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சைக்கிள் சவாரி ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும் 32 நாட்களில் கடக்க பிரதாபன் தர்மலிங்கம் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, சுமார் 2125 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் கடக்கவுள்ளதாக பிரதாபன் தர்மலிங்கம் தெரிவிக்கின்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீட்டு திட்டம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ள இந்திய வம்வாவளி மக்கள் இன்று, கவனிப்பாரற்ற இருக்கின்றமை தனக்கு கவலையளிப்பதாக பிரதாபன் தர்மலிங்கம் தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :