நரேந்திர மோதி கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை

அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி திருப்பூர் வந்திருந்தார்.

அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, திருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டடம், சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

அரசு விழா என்ற போதிலும், மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நரேந்திர மோதி கலந்துகொண்டபோதும், அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.

அரசு விழாவைத் தொடர்ந்து பாஜக கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, தமிழில் வணக்கம் தெரிவித்து தமது உரையைத் தொடங்கினார்.

பின்னர் அவரது ஆங்கில உரையை, பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார்.

தீரன் சின்னமலை மற்றும் கொடிகாத்த குமரனின் பூமி என்று குறிப்பிட்ட மோதி, திருப்பூரில்தான் 'நமோ அகைன்' டீ-சர்ட்டுகள் மற்றும் தொப்பிகள் தயாராவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உண்டாகும் இரண்டு பாதுகாப்பு கேந்திரங்களில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது என்றும் இது பல வேலைவாய்ப்புகளை உண்டாக்கும் என்றும் கூறினார் மோதி.

2022இல் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய உத்தேசித்துள்ளதாகப் பேசிய மோதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவத் திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளார் என்றார்.

18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மோதி கூறியதை எச்.ராஜா 18 லட்சம் கிராமங்கள் என்று தவறாகத் தமிழில் மொழிபெயர்த்தார்.

'மறு எண்ணிக்கை மந்திரி'

காங்கிரஸ் கட்சியை தமது உரையில் விமர்சித்த மோதி, தாங்கள் ஆள்வதற்கே பிறந்தவர்கள் என நினைத்தவர்கள் ஆட்சியை இழந்து வருத்தத்தில் இருப்பதாக மோதி பேசினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று மட்டும் கூறி, பெயர் குறிப்பிடாமல் பேசிய மோதி, "தமிழகத்தைச் சேர்ந்த 'மறு எண்ணிக்கை மந்திரி' ஒருவர் நடுத்தர வர்க்கம் ஏன் விலைவாசி உயர்வு குறித்து வருத்தப்படுகிறார்கள் என்று பேசினார்; அவர் மட்டுமே அறிவாளி என நினைத்தவர்; அதனால்தான் அவர்களை மக்கள் தோற்கடித்தனர்," என்றார்.

'ஃபேமிலி பேக்'

முன்பு செல்பேசி ரீசார்ஜ், ஐஸ் கிரீம் ஆகியவற்றுக்கே 'ஃபேமிலி பேக்' இருக்கும். இப்போது சிறைக்கு போகாமல் இருக்க பிணை வாங்குவதில் ஃபேமிலி பேக் உருவாகியுள்ளது என்றார்.

மோதி அரசு தோல்வியடைந்தது என்று கூறும் எதிர்க்கட்சிகள், எதற்காக பெரிய கூட்டணிகளை அமைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய வரலாற்றிலே முதல் முறையாக விவசாயிகள் வருவாயை இரு மடங்காக்குவது குறித்து பேசியது தமது அரசுதான் என்று மோதி பேசினார்.

மீனவர்கள் மற்றும் மீன்வளத்துக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மோதி தமது உரையில் கூறினார்.

முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டை பாதிக்காது என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வலிமையான திருத்தங்களை தாங்கள்தான் கொண்டுவததாக அவர் கூறினார்.

தமது உரையின் இறுதியில் மூன்று முறை 'பாரத் மாதா கீ ஜய்' என்று கூறிய நரேந்திர மோதி, 'வணக்கம்' சொல்லிவிட்டு உரையை முடித்தார்.

பாஜக மாவட்டத் தலைவர் நன்றி உரை தெரிவிக்கும் முன்னரே பொதுக்கூட்ட மேடையில் இருந்து கிளம்பினார் மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :