நரேந்திர மோதி பேட்டி - கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் என்ன?

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஒரு செய்தி நிறுவனத்தை அழைத்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக விரிவாக பேசியிருக்கிறார்.

மோதியின் பேட்டி நேற்று (செவ்வாய்கிழமை) ட்விட்டரில் ட்ரெண்டானது. பல்வேறு விவகாரங்கள் குறித்து மோதி பேசியிருந்தாலும் அவற்றில் அரசு மீதான விமர்சனங்கள் குறித்து ஒரு பிரதமராக மோதியின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை சுருக்கமாக சொல்லும் தொகுப்பு இது.

1. உர்ஜித் படேல் விவகாரம்

கடந்த மாதம் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது. பதவிக்காலம் முடியும் முன்பே ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் ராஜிநாமா செய்தது இந்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உள்ள மோதலை காட்டுவதாக கருத்துகள் நிலவின.

ஆனால் தனது பேட்டியில், உர்ஜித் படேல் பதவி விலகியதற்கு அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் 6-7 மாதங்களாக என்னிடம் பதவி விலக விரும்புவதாக என்னிடம் தொடர்ந்து கூறினார். அவர் தனது பதவியில் சிறப்பாக பணியாற்றினார். அவர் பதவி விலகியது தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் என உறுதியாக கூறுகிறார் பிரதமர் மோதி.

2. பண மதிப்பிழப்பு

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோதி உயர் மதிப்பு கொண்ட பணத்தாள்கள் செல்லாது. அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். அவரது திடீர் அறிவிப்பு இந்தியா முழுவதும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.

பண மதிப்பிழப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது , மக்கள் பெருஞ்சிரமங்களை சந்தித்தனர், பணமதிப்பிழப்பு ஓர் தோல்விகரமான நடவடிக்கை என்பதை ரிசர்வ் வங்கியின் அறிக்கை காட்டுகிறது என்றெல்லாம் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் பிரதமர் மோதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றி தோல்வி குறித்து எந்தவொரு கருத்தும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று வெளியான பேட்டியில் பணமதிப்பிழப்பு ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை அல்ல எனத் தெரிவித்திருக்கிறார். ''கருப்புபணம் வைத்திருப்பவர்கள் அரசிடம் அறிவித்துவிட்டு அபராதம் கட்டிவிடுங்கள் என நாங்கள் முன்பே எச்சரித்திருந்தோம்'' எனக் கூறியிருக்கிறார். ஆனால் பணமதிப்பிழப்பு காரணமாக ஏற்பட்ட பலன்கள் குறித்து அவர் ஆதாரத்துடன் எதுவும் குறிப்பிடவில்லை.

3. ஜி எஸ் டி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்த மறு ஆண்டே ஜி எஸ் டி வரியை அறிமுகப்படுத்தியது மோதி அரசு. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி வரியை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தினார் மோதி.

ஜிஎஸ்டி வரி குழப்பங்கள் நிறைந்ததாகவும், வணிகர்கள் சிரமத்துக்குள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தவிர, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் நாப்கின் உள்ளிட்டவற்றுக்கான வரிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு பொருள்களுக்கு வெவ்வேறு கூட்டங்களின் முடிவில் ஜிஎஸ்டி வரியை குறைக்கப்பட்டது.

நேற்றைய பேட்டியில் சிறு வியாபாரிகளுக்கு ஜிஸ்டியால் அசௌகரியம் ஏற்பட்டிருப்பது தெரியும் என கூறியிருக்கிறார் பிரதமர் மோதி. ஆனால் அதே சமயம் ''மத்திய மாநில அரசுகள் இணைந்து எடுத்த கூட்டு முடிவுதான் இந்த சரக்கு மற்றும் சேவை வரி'' என்றும் '''ஒரே இடத்தில் வசூலிக்கப்படுவது, வரி நடைமுறையை எளிமையாக்கியிருக்கிறது'' என்றும் கூறியிருக்கிறார்.

4. முத்தலாக் - சபரிமலை விவகாரம்

பாஜகவுக்கு முத்தலாக் விவகாரம் மற்றும் சபரிமலை விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாடு இருப்பது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

முத்தலாக் தடை மசோதாவுக்கு பெரும் ஆர்வம் காட்டிவரும் பாஜக, சபரிமலை விவகாரத்தில் பாலின சமத்துவ உரிமையை காரணம் காட்டி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் எனத் தீர்ப்பு வழங்கியிருப்பதை கேரள அரசு நடைமுறைப்படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த இரட்டை நிலைப்பாடு குறித்த கேள்விக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார் மோதி. இந்த இரண்டு விவகாரமும் முற்றிலும் இருவேறு அம்சங்கள் என்கிறார்.

முத்தலாக் நம்பிக்கை தொடர்பானது அல்ல. அது பாலின சமத்துவம் தொடர்பானது, சமூக நீதி பிரச்சனை எனக் கூறிய மோதி, சபரிமலை விவகாரம் மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது என்கிறார்.

இந்திய பிரதமரான நரேந்திர மோதி, சபரிமலை விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாறுபட்ட தீர்ப்பளித்த ஒரு பெண் நீதிபதியின் தீர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

5. மக்களவை தேர்தல் - 2019

2019 - இந்தியாவுக்கு தேர்தல் ஆண்டு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்திய மக்கள் புது ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம்.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது பாஜக.

நேற்றைய பேட்டியில் சத்தீஸ்கரில் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொள்கிறார், அங்கே பாஜக 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது ஆளும் கட்சிக்கு எதிரான ஓர் உணர்வு அதுவே தோல்விக்கு காரணம் என விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஆனால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை என்பதை தோல்வியாக சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார் நரேந்திர மோதி.

சிவசேனா போன்ற கட்சிகளுடன் உறவு குறித்து பேசும்போது வார்த்தைகளை கவனமாக கையாண்டிருக்கும் மோதி, ''நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து முன்னேறவும், அவற்றை முன்னேற்றவும் விரும்புகிறோம்'' எனச் சொல்கிறார்.மேலும் 2018 பாஜகவுக்கு வெற்றிகரமான ஆண்டுதான் என்கிறார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து சில இந்து அமைப்புகள் நெருக்கடி கொடுத்தது வரும் நிலையில் அதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிந்தால் மட்டுமே அது குறித்து சிந்திக்கவே முடியும் எனச் சொல்லியிருக்கிறார்.

தனது பதவி குறித்து திருப்தி இருக்கிறதா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்யட்டும் எனத் தெரிவித்துள்ள மோதி, 2019 தேர்தல் மக்களுக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும் இடையான போட்டி என்றும் மக்களின் அன்பும் ஆசிர்வாதமும் தனக்கு எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டின் முதல் நாளில் மக்களவை தேர்தலுக்கான சூட்டை பற்றவைத்திருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: