You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2018: விமான விபத்துகளின் ஆண்டு? - தரவுகளுடன் தகவல்
2018: விமான விபத்துகளின் ஆண்டு?
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு அதிக விமான விபத்துகள் நடந்திருப்பதாக கூறுகின்றன தரவுகள். ஆனால், அதே நேரம் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இவ்வாண்டும் பாதுகாப்பான ஆண்டாகவு இருந்திருக்கிறது.
கடும் உயர்வு
கடந்த ஆண்டு 556 பேர் விமான விபத்துகளில் இறந்திருக்கிறார்கள். ஆனால், 2017ஆம் ஆண்டு 44ஆக இருந்தது என்கிறது விமான போக்குவரத்து இணையம்.
கடந்த ஆண்டு மிக மோசமான விபத்து அக்டோபர் மாதம்தான் நடந்தது. இந்தோனீசிய லயன் ஏர் விமானம் விபத்திற்குள்ளானதில் 189 பேர் இறந்தனர்.
2017ஆம் ஆண்டுதான் விமான பொது போக்குவரத்தில் மிகவும் பாதுகாப்பான ஆண்டாக இருந்திருக்கிறது. அவ்வாண்டு ஒரு பயணிகள் விமானமும் விபத்திற்குள்ளாகவில்லை.
பாதுகாப்பான ஆண்டு என்கிறோம்?
அதிகம் பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும், பாதுகாப்பான ஆண்டு என்கிறோம். இதற்கு என்ன காரணம்? விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதுதான் அதற்கு காரணம். 2000 ஆம் ஆண்டில் என்ன எண்ணிக்கை நிலவியதோ அதுவே இப்போதும் தொடர்ந்திருந்தால் ஆண்டுக்கு 64 விமானங்கள் விபத்திற்கு உள்ளாகி இருக்கும் என்கிறார் விமான போக்குவரத்து இணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஹாரோ ராண்டர்.
சபரிமலை: 620 கி.மீ மனித சங்கிலி
கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள்.
அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி பேரணி நடத்தியுள்ளனர் மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இந்த பேரணி நடைபெற்றது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெரிவித்தனர்.
"பொருளாதாரத் தடையை அமெரிக்கா தொடர்ந்தால் அணுஆயுத ஒழிப்பு நடக்காது"
அணு ஆயுத ஒழிப்பு குறித்து தாம் உறுதியாக இருப்பதாக கூறும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், ஆனால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தால் தானும் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட தனது புத்தாண்டு உரையில் கிம் ஜாங்-உன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வட கொரிய அதிபர் ஆற்றிய புத்தாண்டு உரை, தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் சர்வதேச அரசியல் உறவுகளில் முன்னோடி பாதையை அமைத்துக் கொடுத்தது.
2018 ஜூன் மாதம் அணு ஆயுத ஒழிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
முன்னதாக, கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்க நிலப்பரப்பை தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்து பார்த்து அப்பிராந்தியத்தில் வட கொரியா பதற்றங்களை அதிகரித்தது.
நரேந்திர மோதி பேட்டி: ''சபரிமலை மதநம்பிக்கை சார்ந்தது, முத்தலாக் அப்படியல்ல''
பிரதமர் நரேந்திர மோதி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான கேள்விகள் முதல் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருக்கிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், பிரதமர் நரேந்திர மோதியுடன் நேர்காணல் கண்டார். இந்த பேட்டியை ஏஎன்ஐ நிறுவனம் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது தொடர்பான அவசரச் சட்டம் பற்றி பிரதமரிடம் கேட்டதற்கு, "சட்டபூர்வமான நடைமுறைகள் முடிந்த பிறகு மட்டுமே அதைப் பற்றி சிந்திக்க முடியும்" என்று பதிலளித்தார்.
2019 பொதுத்தேர்தலில் மோதிக்கு எதிராக யார் என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், ''இது மக்களுக்கும் எதிர்க்கட்சியின் மகாகூட்டணிக்கும் இடையேயான போட்டி'' என்றார். மக்களின் அன்பும், ஆசிர்வாதமும் தனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க: மோதி பேட்டி: ''என் பணியில் திருப்தி உண்டா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்யட்டும்''
எச்.ஐ.வி: ரத்த தானமும், சந்தேகங்களும்
சாத்தூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்ஐவி மற்றும் ஹெபடிடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரது ரத்தம் ஏற்றப்பட்டதில், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் இந்த இரு நோய்களும் பரவியிருக்கின்றன. ரத்தம் கொடுத்த இளைஞர் குற்ற உணர்வால் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்த விவகாரம் பொது மருத்துவத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ரத்த தானம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையத்தின் முன்னாள் தலைவரும் இரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவருமான அமலோற்பவ நாதன் ஜோசப்பிடம் பேசினார் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அதிலிருந்து.
தானம் அளிக்கப்பட்ட ரத்தத்தைப் பரிசோதிக்கும்போது அதில் எச்.ஐ.வி நோய்த் தொற்று இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த நபர் தனக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருந்தால் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தால், என்ன செய்வது?
ப. சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தால், பிரச்சனை சிக்கலானதுதான். ரத்தம் அழிக்கப்பட்டுவிடும். ஆனால், அவரை பின்தொடர்ந்து எப்படி சிகிச்சை அளிக்க முடியும்? உதாரணமாக, ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தானம் பெறப்பட்ட ரத்தத்தை பரிசோதிக்கும்போது தெரியவருகிறது. அந்த நபருக்கு போதைக்காக பயன்படுத்தப்பட்ட ஊசிமூலம் அது வருகிறது என வைத்துக்கொள்வோம். என்ன செய்வது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்