''ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால் தாமதம்; விரைவில் உங்கள் கணக்கில் 15 லட்சம்'' - ராமதாஸ் அதாவலே

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே

தினத்தந்தி - ''ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால் தாமதம்; விரைவில் உங்கள் கணக்கில் 15 லட்சம்''

2014 நாடாளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என பிரதமர் நரேந்திர மோதி வாக்குறுதி அளித்தார். மேலும் 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வது குறித்து தகவல் வராத நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவலே இது குறித்து தகவல் தெரிவித்திருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

'' ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வெகுவிரைவில் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என நம்புகிறேன்'' என மகாராஷ்டிராவில் நேற்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார் என்கிறது அந்த செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) ''என்னை மௌன பிரதமர் என்றனர்; ஆனால் நான் ஊடகங்களை சந்திக்க பயப்பட்டதில்லை''

சேஞ்சிங் இந்தியா எனும் தனது எழுத்து மற்றும் பேச்சுக்களை உள்ளடக்கிய ஐந்து தொகுப்பு புத்தகங்களை செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெளியிட்ட பிறகு பேசிய மன்மோகன் சிங், தாம் ஊடங்களை சந்திக்க பயந்ததில்லை எனக் கூறியிருக்கிறார்.

இந்திய பொருளாதாரத்தை நிர்வகித்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்ட மன்மோகன், ரிசர்வ் வங்கியை தற்போதைய அரசு கையாளும் விதத்தை விமர்சித்தார்.

'' மக்கள் என்னை மௌன பிரதமர் என்றனர் ஆனால் இந்த புத்தக தொகுப்புகள் நான் என்ன பேசியிருந்தேன் என்பதற்கான விடையாக இருக்கும் என நம்புகிறேன். நான் ஊடகங்களை சந்திக்க பயந்த ஒரு பிரதமர் கிடையாது. அடிக்கடி ஊடகங்களை சந்தித்தேன் மேலும் ஒவ்வொரு முறை அயல்நாட்டுக்கு அலுவல் ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதும் விமானத்துக்கு உள்ளேயோ அல்லது விமானம் தரையிறங்கியவுடனேயே ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறேன்'' என்றார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் : ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்

இந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய லவ் ஜிகாத் வழக்கில் ஹாதியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தநிலையில் ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு அசோகனின் மகளான அகிலா இஸ்லாம் மதத்துக்கு மாறி ஹாதியா என பெயர் மாற்றம் செய்துகொண்டார். பின்னர் ஷெபின் ஜஹான் என்பவரை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி ஹாதியாவின் குடும்பம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு ஹாதியாவுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம், ஹாதியாவை அவரது கணவருடன் இணைந்து வாழ அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.

சமீபத்தில் சபரிமலையின் பாரம்பரியத்தை காப்பதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பதாக கூறி பாஜக சார்பில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாஜகவில் இணைந்தார் ஹாதியாவின் தந்தை அசோகன்.

'' என்னுடைய சட்டப் போராட்டத்தில் பாஜக மட்டுமே முன்வந்து ஆதரித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மௌனமாக இருந்தன. ஆகவே அக்கட்சியில் சேர முடிவெடுத்தேன்'' என்றார் அசோகன்.

தினகரன் - '' ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை'' - பொன்னையன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்த பொன்னையன், நேற்று நீதிபதி முன் ஆஜரானார். சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடந்தது.

ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டாரா? ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து செய்யப்பட்டார் என கூறி வருகிறீர்களே அதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஜெயலலிதா கன்னத்தில் ஆணிக்கட்டைகளால் அடித்ததால்தான், 3 புள்ளிகள் ஏற்பட்டது என கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என பல கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பினார்.

''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து பேட்டி கொடுத்தேன்'' என்றார்.

எந்த அடிப்படையில் நீங்கள் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பினீர்கள் எனக் கேட்டதற்கு தமக்கு சந்தேகம் இல்லையென்றும் ஆனாலும் பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை வைத்து எழுந்த சந்தேகம் அடிப்படையில் அப்படி பேட்டி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: