You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டிய தம்பதிக்கு சிறை
நவ நாஜி தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் விதமாக பெயர் சூட்டிய பின்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது ஆடம் தாமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்களாவர். இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான நெடிய வரலாறு இருக்கிறது என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
இத்தம்பதிகள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
தாமஸுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் க்ளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் தோழியை பார்க்கச் சென்ற இந்தியர் பாகிஸ்தானில் சிறையில் இருந்து விடுதலை
ஃபேஸ்புக் தோழியை பார்ப்பதற்காக நாடு விட்டு நாடு சென்றதால், பாகிஸ்தான் சிறையில் தண்டனையை அனுபவித்து, வீடு திரும்பியிருக்கிறார் மும்பையை சேர்ந்த ஹாமீத் அன்சாரி.
தண்டனைக் காலம் முடிந்தும்கூட பாகிஸ்தான் சிறையில் இருந்த மும்பையை சேர்ந்த ஹாமீத் நிஹால் அன்சாரி, பலவிதமான முயற்சிகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு, அடாரி-வாஹா எல்லை வழியாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தார்.
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தனது தோழியை சந்திப்பதற்காக 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றார் ஹாமீத் அன்சாரி.
விரிவாக படிக்க - பாகிஸ்தான் சிறையிலிருந்து மீண்டு வந்த மும்பை இளைஞர்
ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரருக்கு 8.4 கோடி
ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
வருண் சக்ரவர்த்தியை ஏலம் எடுப்பதற்கான அடிப்படை தொகையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல மடங்கு அதிக தொகைக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது.
யார் இந்த வருண் சக்கரவர்த்தி? மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதற்கு என்ன சொல்கிறார்?
விரிவாக படிக்க - ஐபிஎல்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம்
ஜெயலலிதா சிகிச்சைப்பெற்றபோது அப்போலோவில் உணவுக்கான செலவு 1.17 கோடி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு சுமார் ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. இதில் இன்னும் 44 லட்ச ரூபாய் பாக்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஊடகங்களுக்கு வெளியானது.
உணவுக்காக மட்டும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது.
பொன் மாணிக்கவேல் மீது அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் புகார்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள் சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்ய வற்புறுத்தியதாக அவரது பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழக காவல்துறை தலைவரைச் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சிலை கடத்தல் வழக்குகளில் உரிய சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து புலன் விசாரணை செய்ய வற்புறுத்தியதாகவும் அவரது வற்புறுத்தலைக் கடைப்பிடிக்காத காவல்துறை அதிகாரிகளை திட்டியும் மிரட்டியும் வருவதால் தங்களுக்குப் பணி மாறுதல் வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்