You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் - துருக்கி
சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இனத்தை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞரின் உயிரிழப்பை தொடர்ந்து சீனாவில் உள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் உய்கர் இனத்தை சேர்ந்த பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ஷின்ஜியாங் பகுதியில் அப்தூர்ஹிம் ஹீயிட் எனப்படும் இசைக்கலைஞர் எட்டு வருட சிறை தண்டனை காலத்தில் இருந்தார்.
இந்த முகாம்களில் அவர்கள் உய்கர் இன மக்கள் சித்ரவதை செய்யப்படுவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த முகாம்கள் மறுவாழ்வு வழங்கும் கல்வி முகாம்கள் என சீனா தெரிவிக்கிறது.
உய்கர் இன மக்கள் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் சீனாவின் வட மேற்கு பிராந்தியமான ஷின்ஜியாங் பிராந்தியத்தில் அதிகமாக வசிக்கக்கூடியவர்கள். ஷின்ஜியாங் பிராந்தியம் தற்போது சீன அதிகாரிகளின் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
என்ன சொல்கிறது துருக்கி?
இந்த விவகாரம் தொடர்பாக துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹமி அக்சாய் வெளியிட்ட அறிக்கையில், "மில்லியன் கணக்கான துருக்கிய உய்கர் முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சித்ரவதைக்கும், அரசியல் ரீதியான மூளைச்சலவைக்கும் ஆளாகின்றனர் என்பதில் இனியும் எந்த ரகசியமும் இல்லை. மேலும் தடுத்து வைக்கப்படாதவர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகினறனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"21ஆம் நூற்றாண்டில் மீண்டும் தொடங்கப்பட்ட தடுப்பு முகாம்களும், சீன அதிகாரிகளால் உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக கடைபிடிக்கப்படும் கொள்கைகளும் மனிதத்தன்மைக்கு எதிரானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹியிட்டின் இறப்பு, ஷின்ஜியாங் பிராந்தியத்தில் நடைபெறும் தீவிர மனித உரிமை மீறலுக்கு எதிரான துருக்கி மக்களின் கண்டனத்தை அதிகரித்துள்ளது என்றும், ஐ.நா பொது செயலர் ஆண்டானியோ குடேரிஷ் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அக்சாய் கூறியுள்ளார்.
சீனாவின் ரகசிய முகாம்கள்
அந்த பிராந்தியத்தில் நடைபெறும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு வடிவமைக்கப்பட்ட கல்வி மையங்கள்தான் அந்த முகாம்கள் என தெரிவித்துள்ளது சீனா.
"இந்த முகாம்களில் பயிற்சி பெறுபவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நன்றியுடன் உள்ளனர்" என ஷின்ஜுயாங்கின் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்துள்ளார்.
உய்கர் இன மக்கள் டிஎன்ஏ மாதிரிகளை வழங்க மறுப்பது, தங்கள் மொழியில் பேசுவது, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டு குழுக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹீயட் என்பவர் யார்? என்னவாயிற்று?
ஹியட்டின் இழப்பு குறித்து தாங்கள் கவலை கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. ஹியட்டின் இறப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.
அவர் இளம் தலைமுறையினர் தங்களின் முன்னோர்கள் செய்த தியாகத்தை மதிக்க வேண்டும் என்று கூறும் உய்கர் கவிதையின் வரிகளை கொண்டு பாடல் தயாரித்ததால் கைது செய்யப்பட்டார்.
அதில் "போர் வீர்ர்கள்" என்று குறிப்பிடப்பட்ட அந்த வார்த்தை அவர் பயங்கரவாத அச்சுறுத்தல் வழங்குவதான எண்ணத்தை சீன அதிகாரிகளுக்கு விளைவித்தது.
யார் இந்த உய்கர் மக்கள்?
ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45% பேர் உய்கர் இனத்தவர்கள்.
அவர்கள் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தங்களை மத்திய ஆசிய நாடுகளுடன் இணைத்து கொள்கின்றனர். அவர்களின் மொழி துருக்கியை போன்றது.
கடந்த சில தசாப்தங்களாக சீனாவின் பெரும்பான்மை இனக் குழுவான ஹன் மக்கள் ஷின் ஜியாங் பிராந்தியத்துக்கு வர தொடங்கியதால் உய்கர் இன மக்கள் தங்கள் கலாசாரத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக உணர்கின்றனர்.
திபெத்தை போன்று சீனாவிடமிருந்து தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியம் ஷின்ஜியாங் பிராந்தியம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :