You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் நரேந்திர மோதி தமிழகம் வருகை: கருப்புக் கொடி Vs காவிக் கொடி போராட்டம்
பிரதமர் நரேந்திர மோதி வருகைக்கு எதிராக திருப்பூரில் மதிமக தலைவர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் போராட்டம்
திருப்பூரில் இன்று நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணோளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது.
மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டடம், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோதி திறந்து வைக்கிறார்.
அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டடத்துக்கும் மோதி அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சற்று நேரத்திற்கு போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மோதிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி கோஷங்களை எழுப்பினர்.
தள்ளுமுள்ளு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் இதில் பிரதமரை வரவேற்கும் விதமாக இந்து அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி காட்டுபவர்களுக்கு எதிராக காவிக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றி கொண்டிருக்கும் பொழுது பா.ஜ.க மகளரணியை சேர்ந்த பெண்மணி ஒருவர் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நுழைந்து கூட்டத்தில் செருப்பு வீசியதால் மதிமுக கட்சி தொண்டர்கள் அப்பெண்மணி மீது தாக்குதலில் ஈடுபட தொடங்கியதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :