You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு
வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுக் கொள்வதே இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாணத்தில் தமிழர்கள் செரிந்து வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகள் அனுமதியின்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
வடக்கு பகுதியில் பௌத்த விஹாரைகளில் சில நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ள போதிலும், பௌத்த மாநாடொன்று இதுவரை காலமும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியிலேயே, வட மாகாண ஆளுநரின் தலையீட்டில் இந்த பௌத்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்