ஜருகண்டி - சினிமா விமர்சனம்

ஜருகண்டி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் முதல் படம். பணத் தேவைக்காக கதாநாயகன் ஒரு தவறான செயலில் இறங்க, அதனால் பெரும் சிக்கலுக்குள்ளாவதுதான் கதை.

கதாநாயகனான ஜெய் புதிதாக தொழில் துவங்க கடன் கிடைக்காமல், போலியான ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்குகிறார்.

அதனை வைத்து டிராவல்ஸ் ஒன்றையும் துவங்குகிறார். இந்த நிலையில், இந்த விவகாரத்தைத் தெரிந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி ஒருவர் ஜெய்யிடமும் அவரது நண்பர் டேனியலிடமும் பத்து லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

ஜருகண்டி

ரோபோ சங்கர், தன் காதலியான ரெபா மோனிகாவை தன்னோடு சேர்த்து வைத்தால் பத்து லட்ச ரூபாய் பணம் தருவதாக சொல்கிறார்.

அதனால் ரெபா மோனிகாவைக் கடத்துகிறார்கள் ஜெய்யும் டேனியலும். இந்தக் கடத்தலைத் தொடர்ந்து, பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் இருவரும். அந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது மீதிக் கதை.

துவங்கிய உடனேயே விறுவிறுப்பாக நகர ஆரம்பிக்கிறது படம். போலியாக ஆவணங்களை சமர்ப்பித்து கதாநாயகன் கடன் வாங்குவது, அதையடுத்து காவல்துறையின் மிரட்டலுக்கு ஆளாவது, பணத்திற்காக பெண்ணைக் கடத்துவது, இதனால் மாஃபியா கும்பலுக்குள் மாட்டிக்கொள்வது என முதல் பாதியின் திரைக்கதை பறக்கிறது.

ஜருகண்டி

ஆனால், இடைவேளைக்குப் பிறகு கோட்டைவிட்டிருக்கிறார்கள். கடத்தி வந்த பெண் தப்பியதால், நண்பனை அடகுவைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தேட ஆரம்பிக்கிறார் கதாநாயகன்.

இலங்கை
இலங்கை

இரண்டு நாட்களுக்குள் காவல்துறை அதிகாரிக்கு பணத்தை வேறு தரவேண்டும். இவ்வளவு சிக்கலான சூழலில், மிக பதற்றமாக நகர வேண்டிய படம், பாட்டு, சண்டை, தேவையில்லாத காட்சிகள் என பொறுமையை சோதிக்க ஆரம்பிக்கிறது. படம் முடியும்போது ஒரு நீண்ட படத்தைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

ஜருகண்டி

இந்தப் படத்தின் கதாநாயகன் ஜெய் என்றாலும், படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பவர் கஜேந்திரனாக வரும் ரோபோ சங்கர்தான்.

தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைத்து காதலிப்பது, அதற்காக ஏகப்பட்ட பணத்தைச் செலவழிப்பது, கடத்தலில் ஈடுபடுவது என கலகலப்பாக படத்தை முன்னகர்த்திச் செல்கிறார்.

இலங்கை
இலங்கை

கதாநாயகனுக்கு நண்பனாக வரும் டேனியல், போலி ஆவணங்களை வைத்து கடன் வாங்கிக் கொடுக்கும் இளவரசு ஆகியோரது நடிப்பும் ஓகே.

ஜருகண்டி

இரண்டு, மூன்று பாடல்கள் இருந்தாலும் எதுவும் மனதில் ஓட்டவில்லை. ஆனால், ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மனதைக் கவர்கிறது.

படத்தின் முதல் பாதி திரைக்கதையில் கவனம் செலுத்தியதைப் போல பிற்பாதியிலும் செலுத்தியிருந்தால், ஒரு முழுமையான, விறுவிறுப்பான படம் கிடைத்திருக்கும்.

சினிமா நடிகர்களுக்கு ஆயுதமாகும் தொழில்நுட்பம் - கிளிக் தொழில்நுட்ப நிகழ்ச்சி

காணொளிக் குறிப்பு, சினிமா நடிகர்களுக்கு ஆயுதமாகும் தொழில்நுட்பம் - கிளிக் தொழில்நுட்ப நிகழ்ச்சி

பிற செய்திகள்:

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: