வடசென்னை - சினிமா விமர்சனம்

VadaChennai

பட மூலாதாரம், VadaChennai / Facebook

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

1980களின் பிற்பகுதியில் இருந்து 2000-களின் முற்பகுதிவரையில் விரிகிறது கதை.

உலகமயமாக்கலுக்கு முன்பாக வடசென்னைப் பகுதியில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த ராஜனை (அமீர்), அவனுடன் இருக்கும் செந்தில் (கிஷோர்), குணா (சமுத்திரக்கனி)போன்றவர்கள் கொன்றுவிடுகின்றனர். இதற்குப் பிறகு, குணாவும் செந்திலும் அந்தப் பகுதியில் தாதாக்களாக உருவெடுக்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கிடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குள் வரும் அன்பு (தனுஷ்), சிறையில் உள்ள செந்திலை கொல்ல முயல்கிறார். நண்பர்களாக இருந்த குணாவும் செந்திலும் பகையாளிகளானது ஏன், அன்பு ஏன் செந்திலைக் கொல்ல முயல்கிறான், ராஜனின் மனைவி சந்திரா (ஆண்ட்ரியா) ஏன் குணாவைத் திருமணம் செய்கிறாள், அவளுக்கும் அன்புவுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.

யாரையோ கொலைசெய்துவிட்டு, நான்கு நண்பர்கள் பேசுவதில் துவங்குகிறது படம். அதற்குப் பிறகு, அன்பு சிறைக்குள் வருவது, அவனது காதல் கதை, பிறகு சிறைக்குள் வந்ததற்கான காரணம் என படம் முன்னும் பின்னுமாக நான் - லீனியர் பாணியில் நகர்கிறது. படம் முடிவை நெருங்கும்போது பல முடிச்சுகள் அவிழ்ந்து, புதிர்கள் விடுபடுகின்றன. ஆனாலும், கதை முடிவை நெருங்காததால் வட சென்னை - இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்போடு படம் நிறைவடைகிறது.

VadaChennai

பட மூலாதாரம், VadaChennai / Facebook

படம் துவங்கி முக்கால் மணி நேரத்திற்குள் பல பாத்திரங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கிடையிலான உறவும் மோதலும் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இதனால், கதையைப் புரிந்துகொண்டு ஈடுபாட்டோடு படத்தை பார்க்க ஆரம்பிக்க சற்று நேரம் பிடிக்கிறது. தவிர, இடைவேளை வரை படம் எதை நோக்கி நகர்கிறது என்ற குழப்பமும் இருக்கிறது. படத்தின் பிற்பாதியில்தான் கதையில் ஒரு தெளிவு பிறக்கிறது.

எண்பதுகளின் பிற்பாதியில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தை திரையில் கொண்டுவர ரொம்பவுமே மெனக்கெட்டிருக்கிறார்கள். குறிப்பாக சென்னையின் பழைய மத்திய சிறைச்சாலையின் செட்.

இதுதவிர, எம்.ஜி.ஆர். மரணம், ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவது, அதை ஒட்டிய கலவரங்கள் என அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார் இயக்குனர்.

VadaChennai

பட மூலாதாரம், VadaChennai / Facebook

ஆனால், ஜெயில் செட், அமீரின் உடை, ரேடியோ செய்திகளைத் தவிர வேறு எதுவும் அந்த காலகட்டத்திற்குரிய பாணியில் இல்லாததால், அதில் ஓரளவே வெற்றிகிடைக்கிறது.

தனுஷிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இடையிலான காதல், ஆண்ட்ரியாவின் பாத்திரம் ஆகியவை இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. அதிலும் படம் நெடுக, ஆண்ட்ரியாவின் பாத்திரம் குறித்த ஒரு புதிர்த் தன்மையை விட்டுக்கொண்டே வந்து, கடைசியில் அதனை விளக்குவது சிறப்பு.

படத்தின் ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. பல இடங்களில் வசனங்களும் பின்னணியில் ஒலிக்கும் குரல்களும் மிக மோசமாக இருக்கின்றன.

படத்தில் நடித்திருக்கும் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் என எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதால் ஒரு காட்சிகூட நடிப்பு குறித்த உறுத்தல் இல்லாமல் நகர்கிறது. ஆனால், ராஜனாக வரும் இயக்குனர் அமீர், சிறிது நேரமே வந்தாலும் மனதில் நாற்காலிபோட்டு அமர்கிறார்.

VadaChennai

பட மூலாதாரம், VadaChennai / Facebook

தேவையில்லாத நகைச்சுவை, பாடல்கள் போன்றவை இல்லாததும் படத்தின் பலம்தான். சந்தோஷ் நாராயணனின் திறமை பின்னணி இசையில் மட்டும் தெரிகிறது.

படம் துவங்கும்போது முக்கிய பாத்திரங்களாகத் தென்படும் பலர், படம் நகர நகர மங்கிப்போக, ஆண்ட்ரியாவும் தனுஷும் மேலெழுவது ரசிக்கும்படி இருக்கிறது. அடுத்த பாகமான "வட சென்னை 2 - அன்புவின் எழுச்சி" குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.

ஆனால், ஒரு முழுமையான திரைப்படத்தை எதிர்பார்த்து வரும் சாதாரண ரசிகர்கள் இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: