சண்டக்கோழி-2 முதல் சாமி-2 வரை: சுவாரஸ்ய தகவல்கள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

சாமி ஸ்கொயர் - முதல் பார்வை

விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படம் சாமி ஸ்கொயர். இதில் விக்ரம் முதல் பாகத்தில் வந்த ஆறுச்சாமி கதாபத்திரத்திலும், அவருடைய மகன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைப்பெற்றது. சாமி 2 படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்ததால் தடைப்பட்டது. ஆனால் வேலை நிறுத்ததிற்கு பின் படக்குழு தற்போது இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளது.

இதுவரை படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிடாத இயக்குனர் வரும் 17ம் தேதி மாலை படத்தின் தலைப்புடன் கூடிய முதல் பார்வையை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கே.வி.ஆனந்த்

அயன், மாற்றான் திரைல்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யாவோடு கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் கே. வி. ஆனந்த். சுபாவுடைய நாவல்களை திரைப்படங்களாக உருவாக்கி வந்த இவர் முதன் முறையாக சுபா கூட்டணியில் இருந்து விலகியுள்ளார்.

இப்படத்தில் நடிக்க சூர்யாவோடு மலையாள நடிகர் மோகன்லாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தயாராரிப்பாளர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில் முதல் படமாக தன்னுடைய நீண்டகால நண்பர் பாடகரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜாவை இயக்குநராக்கியுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டும் அந்த படத்தின் பெயரை வெளியிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படத்தின் பெயரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த தலைப்பை திங்கள் கிழமை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.

6 கோடி ரூபாய் செலவில் கிராம 'செட்'

இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதே விஷால், தன்னுடைய அடுத்த படமான சண்டக்கோழி 2விலும் நடித்துக்கொண்டிருந்தார். இந்த படத்துக்காக 6 கோடி செலவில் சென்னை பின்னி மில்லில் ஒரு கிராமத்தை செட் மூலமாக உருவாக்கியிருந்தனர்.

அதில் 50 சதவீத படத்தை முடித்துள்ளனர். மீதமுள்ள காட்சிகளை தென் மாவட்டத்தில் படமாக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.

50 சதவீத காட்சிகளை படமாக்கிய லிங்குசாமி, அதற்கான போஸ்ட் தயாரிப்பு வேலைகளையும் தொடங்கியுள்ளார். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டு சண்டக்கோழி 2 படத்துக்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி விஷாலுக்கு இரண்டாவது படமாகவும், சண்டக்கோழி 2 அவருக்கு 25 வது படமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: