திரைப்பட விமர்சனம் - சங்கு சக்கரம்

தமிழில் சில நாட்களாக ஓய்ந்திருந்த பேய்ப் படங்கள் இப்போது மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. இந்த வாரமே சங்கு சக்கரம் தவிர, பலூன் என்ற படமும் வெளியாகிறது.

ஏதோ ஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரு மந்திரவாதிகளை அனுப்புகிறார். பெரும் சொத்துக்களோடு உள்ள ஒரு சிறுவனை அந்த வீட்டில் வைத்துக் கொன்றுவிட்டு அந்தச் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள் அவனது காப்பாளர்கள்.

விளையாட வேறு இடம் இல்லாத சிறுவர்கள் ஏழு பேர் அந்தப் பேய் மாளிகைக்குள் சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில் ஒரு சிறுவனை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறான் ஒரு கடத்தல்காரன்.

இப்படி இந்த நான்கு தரப்பும் ஒரே நேரத்தில் அந்தப் பேய் மாளிகைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் மாளிகைக்குள் ஒரு தாய் பேயும் (புன்னகைப் பூ கீதா) ஒரு குழந்தை பேயும் (மோனிகா) இருக்கிறது.

இப்படி பல்வேறு தரப்பினரை ஒரே இடத்தில் சேர்த்து பயமுறுத்தி, கலகலப்பாக ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அந்த முயற்சியில் சுத்தமாக வெற்றி கிடைக்கவில்லை.

நகைச்சுவை கலந்த பேய்ப் படத்தில் ஒரு இடத்திலாவது நகைச்சுவையோ, திகிலோ இருக்க வேண்டும். இந்தப் படத்தில் இரண்டுமே மிஸ்ஸிங்.

பணக்காரச் சிறுவனைக் கொல்லும் முயற்சி, கடத்தல் முயற்சி, குழந்தைகள் உள்ளே சிக்கிக்கொள்வது என படத்தின் எந்தக் காட்சியும் ஆழமாகவோ, அழுத்தமாகவோ இல்லை.

உள்ளே இருக்கும் பேய் பயமுறுத்தும் காட்சியில் எந்தவிதப் புதுமையும் இல்லை. க்ளோஸ் - அப்பில் பேய்கள் கத்துவதே படம் நெடுக பல முறை வருகிறது. படம் நெடுக, எல்லோரும் அந்த வீட்டிற்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். குழந்தை பேய் வீட்டைச் சுற்றி சுற்றி ஓடுகிறது.

தாய் பேய் அவ்வப்போது கத்துவதோடு நடு வீட்டில் அந்தரத்தில் சுழல்கிறது. இதற்கு மேல் கதையோ, சுவாரஸ்யமான காட்சிகளோ படத்தில் இல்லை.

ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படத்தின் மூலம் குழந்தைகளையும் மகிழ்விக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், கதை, திரைக்கதை, காட்சியமைப்பு ஆகியவற்றில் சொதப்பியிருப்பதால் எடுபடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :