You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: வேலைக்காரன்
தொடர்ந்து வெற்றிகரமான படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து, பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவும் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.
கொலைகாரக் குப்பத்தில் வசிக்கும் அறிவு (சிவகார்த்திகேயன்) தங்கள் பகுதியில் ஒரு சமூக வானொலி ஒன்றை நடத்திவருகிறார். அதே குப்பத்தைச் சேர்ந்த காசி (பிரகாஷ் ராஜ்) அடிதடி, காசுக்காக கொலைசெய்வது என செயல்படுவதால், அந்தப் பகுதி இளைஞர்களும் அவரிடம் சேர்ந்து வேலைபார்க்கிறார்கள்.
தன் வானொலி மூலம் அந்த இளைஞர்களை மீட்க நினைக்கிறார் அறிவு. ஆனால், காசியால் அந்த வானொலி மூடப்பட, மிகப் பெரிய உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில் சேர்கிறார். ஆனால், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்ததும், அறிவு எடுக்கும் நடவடிக்கைகள்தான் மீதிப் படம்.
அதிகம் விற்பனையாகும் பாக்கெட் உணவுப் பொருட்களின் விற்பனைக்குப் பின்னால் உள்ள அரசியல், உடல்நலக் கேடு ஆகியவற்றை பின்னணியாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுப்பதே ஒரு துணிச்சலான முயற்சிதான். அதிலும் படம் நெடுக, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைப் பற்றிப் பேசுவதும் இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம். ஆனால், ஒரு சினிமா என்ற வகையில், இந்தப் படம் முழுமையாக இல்லை.
படத்தின் துவக்கத்தில் சிவகார்த்திகேயன், ஒரு சமூக வானொலி ஒன்றைத் துவங்கி தன் குப்பத்து மக்களைத் திருத்துவதற்காகப் பேச ஆரம்பிக்கிறார். பிறகு, தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்து அங்கிருக்கும் தொழிலாளர்களிடம் பேசுகிறார். பிறகு, நண்பர்களிடமும் நயன்தாராவிடமும் பேசுகிறார். பிறகு, படம் பார்ப்பவர்களிடம் பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார்.
சமூக வானொலியை ஆரம்பிப்பது, அதன் மூலமாக பிரகாஷ் ராஜுடன் மோதல் வெடிப்பது என முற்பாதியில் சிறிதளவுக்கு சுவாரஸ்யமாக நகர்கிறது படம்.
ஆனால், இரண்டாம் பாதியில் ஒரு மிகப் பெரிய உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் தன் பேச்சின் மூலமாக தொழிலாளர்கள் மனதை மாற்றி இரண்டு நாளைக்கு அபாயமில்லாத வகையில் பொருளைத் தயாரிப்பது, பிறகு சந்தையில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் தன் பேச்சின் மூலமாக அதேபோல பொருட்களைத் தயாரிக்க வைக்க முயற்சிப்பது என நம்பமுடியாத, குழப்பமான காட்சிகளோடு நகர்கிறது படம்.
ஒரு நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு தரமாகப் பொருட்களைத் தயாரிக்க வைத்துவிட்டு, அதை வைத்து பிற நிறுவனங்களின் உரிமையாளர்களையே மிரட்டுவதாக வரும் காட்சிகள் படத்தின் மிக மோசமான பகுதிகளில் ஒன்று. இதைவைத்து, வில்லன் எல்லா நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கிவிடுகிறாராம். அதற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் செய்யும் எல்லாவற்றையும் வெறுமனே பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்.
பிறகு, தரமாக தயாரிக்கப்பட்ட பொருட்களை தீயை வைத்து கொளுத்துகிறார். முடிவில் எல்லோரும் இரவில் 12 மணிக்கு தங்கள் வீட்டில் விளக்கேற்றுங்கள் என்கிறார் சிவகார்த்திகேயன். அதேபோல எல்லோரும் விளக்கை ஏற்றுகிறார்கள். பிறகு, சிவப்புக் கொடியேந்தி பாடுகிறார்கள். அதோடு படம் முடிகிறது.
தொடர்ச்சியாக நகைச்சுவை கலந்த படங்களிலேயே நடித்துவந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் வேறொரு தளத்திற்கு நகர முயற்சித்திருக்கிறார். ஆனால், திரைக்கதை அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு சுத்தமாக வேலையில்லை. ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்துபோகிறார்.
மற்ற காட்சிகள் எல்லாம் துண்டுதுண்டாக வந்துபோகின்றன. அவர் வரும் காட்சிகளை நீக்கிவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்கிற வகையில் இருக்கிறது அவரது பாத்திரம்.
மலையாள நடிகரான ஃபகத் ஃபாஸிலுக்கு இந்தப் படத்தில் வில்லன் பாத்திரம். ஆரம்பத்தில் வசீகரிக்கிறார். பிறகு, சிரித்துக்கொண்டே ஏதோ பெரிதாகச் செய்யப்போகிறார் என்று பார்த்தால் கடைசிவரை எதுவுமே செய்யாமல் போகிறார்.
கதாநாயகியாக வரும் நயன்தாராவைவிட சினேகாவுக்கு அழுத்தமான பாத்திரம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் அவர்.
இவர்கள் தவிர, தம்பி ராமைய்யா, மன்சூர் அலிகான், முனீஸ் காந்த், சதீஷ், காளி வெங்கட் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் சின்னச் சின்ன பாத்திரங்களில் தலைகாட்டிவிட்டுப் போகிறார்கள்.
அனிருத்தின் இசை, ஒளிப்பதிவு, சிறப்பான கலை இயக்கம் எல்லாம், படம் முழுக்க பேசப்படும் அறிவுரைகளுக்கும் குழப்பமான திரைக்கதைக்கும் நடுவில் எடுபடாமலேயே போகின்றன.
இந்தப் படத்தின் முக்கியமான பஞ்ச் வசனம், "சிறந்த சொல், செயல்" என்பது. ஆனால், படத்தில் வெறும் சொற்கள் மட்டுமே கொட்டிக்கொண்டேயிருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்