டிவிட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெறும் 'கமலை சுற்றும் சர்ச்சை'

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும், கருத்துக்களும் சமூக ஊடகமான டிவிட்டரில் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்தும் பலர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும்'

இதற்கிடையே, இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் கூறுகையில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் இழிவுபடுத்தி பேசியுள்ளார் என்றும், அவர் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்தார்.

முன்னதாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவரும் நிலையில், இந்த நிகழ்ச்சி கலாசார சீரழிவை ஏற்படுத்துவதாகக் கூறி ஜுலை 13-ஆம் தேதியன்று இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டுமென அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருந்தனர்.

இது குறித்து விளக்கமளிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழக அரசின் மீதும் சில குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தமிழக அரசின் மீது கமல்ஹாசன் சேற்றை வாரி வீசுவதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக சிலர் #Oviya4CM மற்றும் #OviyaArmy என்ற ஹேஸ்டேக்குகளை உருவாக்கியுள்ளனர்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்