You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொலைக்காட்சி 'ரியாலிட்டி ஷோ' தொகுப்பாளராகிறார் கமல் ஹாசன்
கமல் ஹாசன் `பிக்பாஸ்` என்ற ரியாலிட்டி ஷோ ( யதார்த்த நாடகம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவதாகவும், விரைவில் விஜய் டிவி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியாலிட்டி ஷோ என்றால் என்ன ?
யதார்த்த நாடகம் எனப்படும் ரியாலிட்டி ஷோ வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அடங்குகிறது. மேலை நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் பொதுவாக ஒரு நிஜவாழ்க்கையை நினைவூட்டும் கற்பனை சூழலில் சில பிரபலங்கள் தோன்றி பல வாரங்களுக்கு நடிப்பார்கள்.
இந்த பாணியில் தமிழில் உருவாகும் இந்த தொலைக்காட்சி யதார்த்த நாடகத் தொடரில், பதினைத்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலகு தொடர்பில்லாமல் செல்ஃபோன்களின்றி தொடர்ந்து நூறு நாட்கள் இணைந்து வசிக்க உள்ளனர்.
போட்டியாளர்களுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.
வாரம் ஒரு முறை போட்டியாளர்கள் தங்களுடன் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரை போட்டியிலிருந்து நீக்குவார்கள்.
என்ன சொல்கிறார் கமல் ஹாசன் ?
தனது வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுத்தான் வந்துள்ளதாகவும், தற்போது அதற்கு எதிர்மறையாக மக்களுடன் சேர்ந்து வீட்டில் வசிப்பவர்களை தான் கண்காணிக்க உள்ளதாகவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து யார் வெற்றிப் பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழக மக்களிடம் யதார்த்த நாடகம் வெற்றிபெறுமா ?
தமிழகத்தில் சீரியல்களின் தாக்கம் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் ஆழமாக வேறூன்றி உள்ள நிலையில் இதுப்போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வணிக ரீதியில் வெற்றி பெறுமா என்று சினிமா விமர்சகரான வெற்றிவேலிடம் கேள்வியை முன்வைத்தோம்.
''இந்திய அளவில் பிரபலமான ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்னும் போது அதனை காணவேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் இயல்பாக இருக்கும். ஆனால், மக்கள் மத்தியில் சீரியல்கள் பிடித்திருக்கும் இடத்தை ரியாலிட்டி ஷோக்கள் பெறுமா என்பது அதில் பங்குபெறப் போகும் போட்டியாளர்களைப் பொறுத்துதான் இருக்கிறது ,'' என்றார்.
மேலும், ''பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளில் வட இந்தியாவில் சர்ச்சைக்குரிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அதுதான் அந்த நிகழ்ச்சிக்கு வெற்றியாக அமைந்தது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற சர்ச்சைக்குரிய பிரபலங்கள் மிகவும் குறைவு'' என்கிறார் அவர்.
விஸ்வரூபம் 2 போஸ்டர் வெளியீடு
கமல் ஹாசன் மற்றும் சந்திரஹாசன் தயாரிப்பில் கமல் இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். அப்படத்தின் 2 ஆம் பாகத்தை இந்த ஆண்டிற்குள் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். அதன் முதல் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 போஸ்டர் வெளியீடு மற்றும் விஜய் டி வியின் பிக் பாஸ் அறிவிப்பு கமல் ரசிகர்களை நீண்ட இடைவேளைக்குப்பிறகு உற்சாகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்