ரஜினி, கமல், நாகர்ஜூனா, அனில் கும்ப்ளே ஆகியோர் ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையின் போது, இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார். மோடியின் இந்த நடவடிக்கையானது பிரபலங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில், பிரதமருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணிச்சலான நடவடிக்கை - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

அதில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை வெளி கொண்டுவரும் உதவியாக மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றுள்ளதாக ஜனாதிபதியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஜனாதிபதியின் பதிவை மீள்பதிவிட்ட மோடி, அதில் ஜனாதிபதிக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை ஊழல் மற்றும் கறுப்பு பணத்திலிருந்து விடுவிக்க இதுதான் சரியான தருணம் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹேட்ஸ் ஆஃப் மோதி - ரஜினி வாழ்த்து

திரைப்பட நடிகரும், பிரதமர் மோதியின் நண்பருமான ரஜினிகாந்த தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், ’’ஹேட்ஸ் ஆஃப் மோதி ஜி. புதிய இந்தியா பிறந்துவிட்டது ஜெய்ஹிந்த்’’ என்று பதிவிட்டுள்ளார்.

வரி கட்டுபவர்களை கெளரவப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் - நாகர்ஜூனா

பாரிஸிலிருந்து மோடியை பாராட்டி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள தெலுங்கு திரைப்பட நடிகர் நாகர்ஜூனா, ’’மோடி ஜி எங்களைப் போன்ற வரி கட்டுபவர்களுக்கு வெகுமதி அளித்ததற்கு நன்றி. சிறந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா செல்கிறது’’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு அரசியல் கட்சிகளால் கொண்டாடப்பட வேண்டும் - கமல்

திரைப்பட நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’’சல்யூட் மோடி. இந்த நடவடிக்கையானது அனைத்து அரசியல் கட்சிகளாலும் கொண்டாடப்பட வேண்டும். அதிலும், முக்கியமாக அக்கறையுடன் வரி செலுத்துபவர்களால்’’, என்று தெரிவித்துள்ளார்.

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் - அனில் கும்ப்ளே

’’மோடி ஒரு கூக்ளி வீசியுள்ளார். வாழ்த்துக்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்’’, என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர்களைத்தவிர்த்து, பாபா ராம்தேவ், கரன் ஜோகர், ஐஷ்வர்யா தனுஷ், ஹர்பஜன் சிங், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், மாதூர் பண்டர்கர், ரித்தேஷ் தேஷ்முக் போன்ற பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முக்கிய பிரபலங்களின் வாழ்த்து பதிவுகளை தன்னுடைய பக்கத்தில் மீள்பதிவு செய்து வருகிறார் மோடி.