You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`ஷாப்பிங்' மனைவிக்காக காத்திருக்கும் கணவருக்கு பொழுதுபோக்கு மையம்: சீனாவில் ஒரு புதுமை!
ஷாப்பிங் செல்லும் போது கணவர்களை விட்டுச் செல்வதற்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ்' என்ற பொழுதுபோக்கு முனையங்களை சீனாவை சேர்ந்த ஒரு ஷாப்பிங் மால் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தி பேப்பர் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் படி, ஷாங்காய் மாகாணத்தில் அமைந்துள்ள க்ளோபல் ஹார்பர் என்ற ஷாப்பிங் மால், ஷாப்பிங் செல்லும் போது அனைத்துக் கடைகளையும் சுற்றி அலைவதற்கு அதிருப்தி தெரிவிக்கும் கணவர்களுக்காக கண்ணாடியால் செய்யப்பட்ட பொழுதுபோக்கு முனையங்களை அமைத்துள்ளது.
ஒவ்வொரு முனையத்திலும் இருக்கை, திரை, கணினி மற்றும் கேம்பேட் என அழைக்கப்படும் விளையாட பயன்படுத்தப்படும் பலகைகள் இருக்கின்றன. இந்த முனையத்தில் அமரும் ஒருவர் 1990-களில் மிகவும் பிரபலமாக இருந்து ரெட்ரோ கேம்களை விளையாடலாம். தற்சமயம் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இனிவரும் மாதங்களில் தங்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்தி சிறிதளவு தொகை செலுத்திய பின்னரே பயனாளர்களால் இதை உபயோகிக்க இயலும் என்று பணியாளர் ஒருவர் அந்த நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த பொழுதுபோக்கு முனையங்களை பயன்படுத்திய சிலர் இது ஒரு வித்தியாசமான புதிய யோசனை என்று தாங்கள் நினைத்ததாக தி பேப்பர் நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.
யாங் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில், `உண்மையாகவே இது சிறந்த முறையில் இருந்தது. நான் டெக்கன் 3 என்ற விளையாட்டை விளையாடினேன். நான் எனது பள்ளிக்கூட காலங்களில் இருப்பதைப் போன்று உணர்ந்தேன்` என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபரான வூ, இந்த அமைப்பில் முன்னேற்றம் தேவை என்றார். குறிப்பாக சரியான காற்றோட்டம் இல்லை என்றும், 5 நிமிடத்தில் தான் வியர்வையில் நனைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷாப்பிங் செல்ல ஊக்கப்படுத்துமா?
தற்போது சீனாவின் சமூக வலைதளங்கில் மிகப் பெரிய அளவில் நகைச்சுவையை ஏற்படுத்தி பொழுதுபோக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு முனையங்கள்தான். இது மேலும் பரவுமா என்ற விவாதத்தையும் சமூக வலைதளங்களில் தூண்டியுள்ளது.
இதை பயன்படுத்திய பயனாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த பொழுதுபோக்கு முனையங்கள் மனைவியுடன் ஷாப்பிங் செல்வதற்கும் பொருட்களை வாங்குவதற்கான தொகையை செலுத்தவும் கணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், வேறு சிலர் குறிப்பாக பெண்கள் இதை மறுத்துள்ளனர். `ஷாப்பிங் செல்லும் போது எனது கணவர் என்னுடன் இருக்க வேண்டுமே தவிர கேம் விளையாடுவதற்கு அவரை ஏன் நான் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கும் பல பெண்கள் ஆதரவாகத்தான் கருத்துத் தெரிவிப்பார்கள்!.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்